வி.சி.க. நிர்வாகி கொலை- கைதான டிரைவர் மாவுக்கட்டுடன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
- ஆத்திரமடைந்த அங்குச்சாமி குடிபோதையில் அகரமுத்துவை குத்தி கொலை செய்தார்.
- அகரமுத்து உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே உள்ள கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அகரமுத்து (வயது 38). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொறுப்பாளரான இவர் பழனி சாலையில் உள்ள மர அறுவை மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் அங்குச்சாமி (35). கார் டிரைவரான இவருக்கும், அகரமுத்துவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த பொங்கல் விழாவில் இவர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அங்குச்சாமி குடிபோதையில் அகரமுத்துவை குத்தி கொலை செய்தார். இதை தடுக்க வந்த அவரது அண்ணன் ஜெய்கணேசுக்கும் காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அகரமுத்து உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக அங்குச்சாமி மற்றும் முத்தழகுபட்டியை சேர்ந்த செல்வம் மகன் ஷியாம் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்ற போலீசார் அங்குச்சாமியை அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரின் பிடியிலிருந்து தப்ப முயன்றதால் அங்குச்சாமி தவறி விழுந்தார். இதில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து மாவுக்கட்டுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.