தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான மேலும் ஒரு சிறுமி உடல் மீட்பு
- முக்கூடல் மற்றும் வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- சிறுமியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி துடித்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.
நெல்லை:
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகஅர்ச்சுனன். மாப்பிள்ளையூரணி கே.வி.கே.சாமி நகரை சேர்ந்தவர் அய்யப்பன். நண்பர்களான இவர்கள் 2 பேரும், தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக, நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வேளார்குளத்தில் உள்ள தங்களது நண்பர் வீட்டுக்கு நேற்று வந்தனர்.
பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். முத்துமாலையம்மன் கோவில் அருகே ஆற்றில் 3 பேர் குடும்பத்தையும் சேர்ந்த சுமார் 15 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதில் சிறுமிகள் உள்பட 6 பேர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்தவர்களும், அவர்களது உறவினர்களும் அவர்களை காப்பாற்ற முயன்ற நிலையில் 4 பேரை மீட்டனர்.
இதில் நாகஅர்ச்சுனன் மகள் வைஷ்ணவி (வயது 13), அய்யப்பன் மகள் மாரி அனுஷியா (16) ஆகிய 2 பேரையும் காணவில்லை. அவர்கள் ஆழமான பகுதியில் மூழ்கினர். இதுகுறித்து உடனடியாக முக்கூடல் மற்றும் வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரவநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர்.
மேலும் சேரன்மகாதேவி மற்றும் அம்பை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர்.
மாயமான 2 சிறுமிகளையும் ஆற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் வைஷ்ணவி பிணமாக மீட்கப்பட்டாள். தொடர்ந்து மாரி அனுஷியாவை தேடி பார்த்தனர். ஆனால் இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலை முதல், மாயமான மாரி அனுஷியாவை தேடும் பணியில் 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
அப்போது மாரி அனுஷியா மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.
சிறுமியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி துடித்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.