சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தி.மு.க. வக்கீல்களுக்கு உள்ளது- அமைச்சர் துரைமுருகன்
- தி.மு.க.வுக்கு வரும் ஆபத்தை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த இவ்வளவு பேர் உள்ளார்கள்.
- தமிழ்நாட்டில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராவார் என்ற முன்னுரையாக இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.
சென்னை:
தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு – சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
திராவிட இயக்கப் பாடல்களுடன் காலை 7 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
இந்த மாநாடு இவ்வளவு பெரியதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, கொஞ்சம் பேர் இருப்பார்கள் அதில் கருத்துக்கள் வரும் என்று நினைத்திருந்தேன். ஒரு கட்சி மாநாட்டுக்குரிய கம்பீரம் இந்த சட்டத்துறை மாநாட்டிற்கு உள்ளது.
தி.மு.க.வுக்கு வரும் ஆபத்தை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த இவ்வளவு பேர் உள்ளார்கள். இந்தப் படையை தோற்கடித்து எவராலும் எங்கள் மீது கை வைக்க முடியாது.
அந்த காலகட்டத்தில் தி.மு.க.விற்கு ஒரே ஒரு வக்கீல் தான். அவர் தான் கோகுல கிருஷ்ணன். கோயம்புத்தூர் முதல் கும்மிடிப்பூண்டி வரை எந்த வழக்கு வந்தாலும் கோகுல கிருஷ்ணன் தான் பார்ப்பார். அவர் நீதிபதியாக ஆன பிறகுதான் சண்முகசுந்தரம் வந்தார்.
ஜெயலலிதா ஆட்சியில் சண்முகசுந்தரத்தை 21 முறை வெட்டினார்கள், அவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவர் சண்முகசுந்தரம்.
இந்தியாவில் நம்முடைய சட்டத்துறைதான் அநியாயங்களை தட்டி கேட்கக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்றது.
செக்யூலரிசத்தை கூட ஒரு ஜனாதிபதி உச்சரிக்க மாட்டார் என்றால் இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது. எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு குவித்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.
ஒன்றிய அரசிடமிருந்து சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வழக்கறிஞர்களாகிய உங்களிடம் உள்ளது. நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராவார் என்ற முன்னுரையாக இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சி முடியும்போது பல்வேறு வழக்குகள் இருக்கும். மீண்டும் இந்த வழக்குகளை சந்தித்து பொது வாழ்க்கை தொடர வேண்டுமென்றால் வழக்கறிஞர்கள் ரொம்ப முக்கியம்.
வழக்கறிஞராக மட்டுமல்ல நீதி பரிபாலனம் சொல்லக்கூடிய இடங்களில் நீங்கள் மற்றும் உங்கள் பிள்ளைகள் இருக்க வேண்டும். அப்படி வந்தால் தான் திராவிட மாடல் ஆட்சி 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-
தி.மு.க. சட்டத்துறை மிக வலுவான, போற்றுதலுக்குரிய ஒரு அணி. நம் நினைவில் வாழும் கலைஞரும், நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அடிக்கடி நம்மை பாராட்ட காரணம் இந்த துறை மூலம் தி.மு.க.விற்கு பல்வேறு பெருமைகளை சேர்த்து இருக்கிறோம்.
தி.மு.க. சட்டத்துறை மாநாடு நடத்தினால் அடுத்து நடக்கக்கூடிய தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அது கடந்த கால வரலாறு. இது ஒரு சென்டிமென்ட் ஆன விஷயம். 2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெல்லப் போவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, மாநாட்டு வளாகத்தில் முன்னாள் மத்திய மந்திரி மறைந்த என்.வி.என். சோமு பெயரில் கொடி மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையில் நிறுவப்பட்டுள்ள 50 அடி உயர கொடி கம்பத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி.க்கள் கிரிராஜன், கனிமொழி சோமு, தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், சூர்யா வெற்றி கொண்டான், துணைச் செயலாளர்கள் மருது கணேஷ், ரகு, சந்திரபோஸ், வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாலை நடைபெறும் மாநாட்டு நிறைவு விழாவிற்கு தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமை தாங்குகிறார். சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை வரவேற்புரையாற்றுகிறார்.
விழாவில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, க.பொன்முடி, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி ஆகியோர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கயிருக்கிறார்கள். தொடர்ந்து, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
முடிவில் சட்டத்துறை இணை செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறுகிறார்.