சர்வதேச புத்தகக் காட்சியில் 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து- முதலமைச்சர் பெருமிதம்
- சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
- கடந்த 2023ம் ஆண்டு 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே கையெழுத்தான நிலையில், இந்தாண்டு 3 மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 3-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 16ம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் மொழிபெயர்ப்பு தொடர்பாக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே கையெழுத்தான நிலையில், இந்தாண்டு 3 மடங்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"உலகைத் தமிழுக்குக் கொண்டு வருதல்; தமிழை உலகிற்குக் கொண்டு செல்வது" - இந்தியாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வியால் தொடங்கப்பட்ட இந்த தனித்துவமான முயற்சி புதிய மைல்கற்களை அமைத்துள்ளது.
2023 இல் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் தொடங்கி, 2024 இல் 752 ஆக வளர்ந்து, இப்போது #CIBF2025-ல் 1125 ஐ எட்டியுள்ளது - 1,005 ஒப்பந்தங்கள் தமிழ் புத்தகங்களை வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கும், 120 ஒப்பந்தங்கள் வெளிநாட்டு மொழி புத்தகங்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்கும் ஆனவை.
தமிழ் அறிவுஜீவிகள் இந்த சாதனைக்கும், தமிழ் இலக்கியத்திற்கான உலகளாவிய அங்கீகாரத்திற்கும் நமது திராவிட மாதிரி அரசாங்கத்தின் அனுமதிக்கும் மற்றும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கின்றனர். நமது எழுத்தாளர்கள் ஞானபீடத்தை மட்டுமல்ல, நோபலையும் வெல்ல வேண்டும் என்று இலட்சியமிடுவோம்!
இந்த சிறந்த சாதனைக்காக அமைச்சர் அன்பில் மகேஷ்
மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.