தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் பெரியாரை விமர்சித்து வாக்கு கேட்டால் தெரியும், அவர் யார் என.. - ப.சிதம்பரம்

Published On 2025-01-18 21:36 IST   |   Update On 2025-01-18 21:36:00 IST
  • பெரியார் என்பது தனி மனிதனல்ல. சமூக இழுவுகளை எதிர்த்த பெரிய போராட்டம் ஒரு இயக்கம்.
  • இன்றும் சமூக இழிவுகளை எதிர்ப்பது தான் பெரியார் கொள்கை.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன. நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் திறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடுகிறார்.

இதனால் தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.

இந்நிலையில், "ஈரோடு கிழக்கில் பெரியாரை விமர்சித்து வாக்கு கேட்டால் தெரியும்.. பெரியார் யார் என தெரியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பெரியார் காலத்தில் இப்போது இருக்கக்கூடிய மத்திய அரசின் விதிகள் இருந்தால், இன்று காவல்துறை நடந்து கொள்வது போல அன்று நடந்திருந்தால் காலம் முழுவதும் பெரியார் சிறையில் இருந்திருப்பார்.

பெரியார் என்பது தனி மனிதனல்ல. சமூக இழுவுகளை எதிர்த்த பெரிய போராட்டம் ஒரு இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை நாம் இப்போது களங்கப்படுத்த வேண்டுமா? பெரியார் சமூக இழிவுகளை எதிர்த்து வெற்றி கண்டார். இன்றும் சமூக இழிவுகளை எதிர்ப்பது தான் பெரியார் கொள்கை.

பெரியார் பிறந்த ஊரில் ஈரோடு கிழக்கில் பெரியாரை விமர்சித்து வாக்கு கேட்டு பாருங்கள். எத்தனை மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிந்து விடும். திராவிடர்கள் என்பது ஆரியர்கள் அல்லாதவர்களை குறிக்கிறது. திராவிடம் என்பது தமிழ்நாடு அல்ல தென்னிந்திய மாநிலங்களை குறிப்பது தான் திராவிடம்" என்று பேசியுள்ளார்.

Tags:    

Similar News