தலித் இளைஞர் படுகொலை: காவலர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய சிபிஐ(எம்) வலியுறுத்தல்
- கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடு வழங்கவேண்டும்.
- தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது.
பெரம்பலூரில் தலித் இளைஞர் கழுத்து அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட விவாகரத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 30) என்கிற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமான இந்த படுகொலையை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது. சமாதானம் பேசலாம் என்று குற்றவாளிகளிடம் காவலர்களும், வஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் முன்னிலையிலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.
சட்ட ரீதியாக காவலர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மாறாக கொலையாளி தேவேந்திரனிடம் கொலை செய்யப்பட்டவரை அழைத்துச் சென்றதன் மூலம் காவலர்களும் அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும், இத்தகைய நிகழ்வுகளில் சட்டத்திற்குப் புறம்பாக குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று சிபிஐ(எம்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.