திருவான்மியூரில் காதலியை காரில் கடத்த முயற்சி: தாய்க்கு சரமாரி வெட்டு- வாலிபர் கைது
- இளம்பெண்ணுக்கும் பிரசாத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
- காரில் வந்த பிரசாத் காதலியை கடத்த முயன்றார்.
திருவான்மியூர்:
முட்டுக்காடு கரிக்காட்டு குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத். 25 வயது வாலிபரான இவர் திருவான்மியூரில் செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பெசண்ட் நகரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் காதல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் பிரசாத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசாத்தை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார். இது பிரசாத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று இரவு 9.30 மணி அளவில் பிரசாத்தின் காதலி தனது தாயுடன் திருவான்மியூரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த பிரசாத் காதலியை கடத்த முயன்றார். இதனை தடுத்த தாயை கத்தியால் வெட்டினார். இதில் காயம் அடைந்த தாய் அலறி துடித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டதால் பயந்து போன பிரசாத் தான் வந்த காரிலேயே தப்பி ஓடி விட்டான். இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டு அருகே பதுங்கி இருந்த பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.