தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது

Published On 2025-01-05 02:24 GMT   |   Update On 2025-01-05 02:24 GMT
  • கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் சரிவடைந்து கொண்டே செல்கிறது.
  • 2019-ம் ஆண்டுடன், 2024-ம் ஆண்டினை ஒப்பிட்டால் 1 லட்சத்து 3 ஆயிரத்து 880 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் பேர் இருந்தனர். தேசிய அளவில் மக்கள் தொகையில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது என ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகியவை கணித்து உள்ளது.

ஆனால் தேசிய சராசரியை விட நாட்டிலேயே அதிக அளவாக பீகாரில் 1.98 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 1.70-ம், மேகாலயாவில் 1.5-ம், மத்திய பிரதேசத்தில் 1.49 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி உள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிராவில் 0.71 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 0.78 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தென்மாநிலங்களான கேரளாவில் 0.22-ம், ஆந்திராவில் 0.61 சதவீதமும், கர்நாடகாவில் 0.68 சதவீதமும், தெலுங்கானாவில் 0.74 சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய சராசரியை விட இது மிக குறைந்த அளவாக இருக்கிறது. இருப்பினும் இந்த சதவீதம் இன்னும் குறைவாகவே இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் சரிவடைந்து கொண்டே செல்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 701 குழந்தைகள் பிறந்துள்ளனர். 2020-ம் ஆண்டு 9 லட்சத்து 39 ஆயிரத்து 783-ம், 2021-ம் ஆண்டில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 864-ம், 2022-ம் ஆண்டில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 367-ம், 2023-ம் ஆண்டு 9 லட்சத்து 2 ஆயிரத்து 306-ம் உள்ளது.

ஆனால் இதுவரை இல்லாத அளவாக 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளனர். இது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவாகும். அதோடு, குழந்தைகள் பிறப்பில் தமிழகம் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

அதன்படி 2019-ம் ஆண்டுடன், 2024-ம் ஆண்டினை ஒப்பிட்டால் 1 லட்சத்து 3 ஆயிரத்து 880 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. இது 11 சதவீத சரிவு ஆகும். அதேவேளையில் 2024-ம் ஆண்டினை 2023-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 60 ஆயிரத்து 485 குழந்தை பிறப்புகள் குறைந்துள்ளது. இது 6.71 சதவீத சரிவு ஆகும்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது உண்மை தான்.

2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆஸ்பத்திரிகளில் பிறப்பை பதிவு செய்ய 10 நாட்கள் வரை எடுத்து கொள்வார்கள். எனவே தற்போதைய கணக்கின் அடிப்படையில் இன்னும் சில குழந்தைகள் அதில் பதிவாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக இன்னும் சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் வரை இதில் சேரலாம். எனவே இறுதி பட்டியலில் சில மாற்றங்கள் இருந்தாலும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டால் 2024-ம் குழந்தைகள் பிறப்பு குறைவு தான் என்றார்.

Tags:    

Similar News