தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுகிறது- ஆளுநர் மாளிகை
- ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவையில் இருந்து வெளியேறினார்.
- பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றே நிமிடங்களில் அவர் அவையில் இருந்து வெளியேறினார்.
சட்டசபையில் கூட்டத்தின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்டாததை எதிர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது.
மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.
அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது.
இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.