தமிழ்நாடு

பேசினால் பிரச்சனை உருவாகனும், கலகம் ஏற்படனும்: இல்லையென்றால் என்ன பயன்?- சீமான் தடாலடி

Published On 2025-01-06 19:55 IST   |   Update On 2025-01-06 19:55:00 IST
  • நானாவது கொஞ்சம் இலக்கியம் பேசினேன். நீங்கள் முழுவதும் அரசியல் பேசினீர்கள். அது என்னது எனச் சொல்லுங்கள்...
  • உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நான் பேசியது தவறு என்றால் நீங்கள் பேசியது எப்படி சரி?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள வரிகளெல்லாம் எங்கே. 10-க்கும் மேற்பட்ட வரிகளை நீங்கள் எடுத்துட்டீங்க. நான் மொத்தமா பாட்டையே எடுத்துட்டேன். அவ்வளவுதானே.

திராவிடநல் திருநாடு இங்கே ஏன் வருகிறது? திராவிடம் என்ற சொல் என்ன மொழி? தமிழ்த்தாய் வாழ்த்தில் சமஸ்கிருத வார்த்தை வருகிறதா? இல்லையா? தமிழ்த்தாய் வாழ்த்தில் என்ன திராவிடம் வருகிறது. திராவிட நாடு எங்கிருந்தது? உங்கள் வசதிக்கு திராவிட நாடு என்ற வார்த்தை வந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்தாய் ஆக்கிட்டீங்க.

நான் அதிகாரத்திற்கு வந்தால் எங்க தாத்தா புரட்சி பாவலர் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாய் போடுவோன். அந்த பாட்டை போட்டுக்கிட்டு இருக்கேன்... உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்லுங்க.

அரசு விழாவில் நீங்கள் போடாமல் இருங்க... இது பொது நிகழ்வு... புத்தக வெளியீட்டாளர்கள். பதிப்பாளர்கள் அமைப்பு அரசு கொடுக்கிற பணத்தில் இயங்குகிறது என்றால், அரசுக்கு காசு ஏது? என்னை கண்டிக்கிறீர்கள் இல்லையா? என்னுடைய காசு அதில் இருக்கிறதா? இல்லையா? நான் பேசும்போது முன்னாடி இருந்து கைத்தட்டினார்களே அவர்களடைய காசு இருக்கிறதா? இல்லையா? தமிழன் காசுதான் இருக்கிறது?

நான் இங்கிலீஷ் தாய் வாழ்த்து பாட்டு போட்டேனே? இந்தி தாய் வாழ்த்து போட்டேனா? தமிழ்த்தாய் வாழ்த்துதானே போட்டேன்... தூயத் தமிழில் எங்கள் புரட்சி பாவலர் பாடிய பாடலை போட்டேன். ரவீந்திரநாத் தாகூர் பாட்டை போட்டேனா? அப்படி ஒன்னும் இல்லலா...

உங்களுக்கு என்ன பிரச்சனை. அந்த பாட்டை போட்டதால் கொட்டகை பற்றி எரிந்ததா? பல பேர் இறந்து போய் விட்டார்களா? அப்படி ஏதும் இருக்கா?

நான் பேசிவிட்டு இறங்கிய பிறகு, கலைஞர் கின்னஸ் என்ற நூலை வெளியிட்டீங்களே... அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் எல்லோரும் வெளியிட்டு பேசினார்கள். நானாவது கொஞ்சம் இலக்கியம் பேசினேன். நீங்கள் முழுவதும் அரசியல் பேசினீர்கள். அது என்னது எனச் சொல்லுங்கள்...

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நான் பேசியது தவறு என்றால் நீங்கள் பேசியது எப்படி சரி?

எனக்கு மட்டுதான் கண்டனம் தெரிவிக்க முடியும் (உங்களுக்கு மட்டும்தான் கண்டனம் தெரிவித்துள்ளார்களே என்ற கேள்விக்கு). நான் மட்டும்தான் உங்களுக்கு பிரச்சனையா தெரியுது... கண்டனம் வரவில்லை என்றால், அரைநாள் செலவழித்து மேடையில் ஏறி நான் ஏன் பேசனும்... வினையாற்றாத சொல் வீண். பேசினால் ஒரு பிரச்சனை உருவாகனும், ஒரு பிரளயம் ஏற்படனும், ஒரு கலகம் ஏற்படனும். சும்மா போய் நான் ஏன் பேசனும். அது வேற யாராவது பேசுவாங்க...

தமிழ்தேசம், தமிழ்தேசியம் என புத்தகத்தில் உள்ளது. தமிழ்தேசியத்தை முன்னெடுக்கும் மகன் இதைக்கூட பேசவில்லை என்றால், நான் கைத்தடி வைத்திருக்கிறேனா? துப்பாக்கி வைத்திருக்கிறேனா.

கைத்தடி வைத்திருக்கிறவன் தட்டி தட்டி நடக்கிறார். நான் துப்பாக்கி வைத்திருக்கிறவன். இரண்டு குண்டாவது வெடிக்கனும். இல்லையென்றால் அந்த நிகழ்ச்சியில் நான் ஏன் கலந்துக்கனும். இப்படி நடக்கும் என தெரிந்துதான் நிகழ்ச்சி நடந்திருக்கு. இல்லை என்றால் என்னை ஏன் கூப்பிட்டு வெளியிடனும்?

எல்லோரும் அரசியல் பேசுறாங்கள். நான் பேசியது தான் பிரச்சனையா இருக்குது.

இவ்வாறு சீமான் பேட்டியின்போது தெரிவித்தார்.

Tags:    

Similar News