அரசு பஸ்சில் பெண் பயணியிடம் நகை திருட்டு - போலீசார் விசாரணை
- சுமார் 6 பவுன் தங்க நகைகளை ஒருநகை பெட்டியில் வைத்து தனது கைப்பையில் வைத்திருந்தார்.
- நகைகள் கிடைக்காததால் அதற்கு முன்பு பஸ் நிறுத்தப்பட்ட இடத்தை போலீசார் விசாரித்தனர்.
திண்டிவனம்:
சீர்காழி அடுத்த திருவெண்காடு பகுதி சேர்ந்தவர் ராஜன் இவரது மனைவி மெர்லின் (27). இவர் தனது இரு கை குழந்தைகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீடான சென்னையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட பின் நேற்று முன்தினம் தனது சகோதரர் வசந்த் (19) மற்றும் தனது இரு கை குழந்தைகளையும் அழைத்து கொண்டு அரசு பஸ்சில் சீர்காழிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
சுப நிகழ்ச்சியில் தான் அணிந்திருந்த நெக்லஸ் கம்மல் மற்றும் தனது குழந்தைகள் அணிந்திருந்த பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட சுமார் 6 பவுன் தங்க நகைகளை ஒருநகை பெட்டியில் வைத்து தனது கைப்பையில் வைத்திருந்தார். பஸ் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடக்கும் பொழுது தனது குழந்தைக்கு பால் பாட்டில் எடுப்பதற்காக தனது கை பையை திறந்த போது அதிலிருந்து நகை பெட்டி காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பஸ் டிரைவர் அவர்களை அங்கு இறக்கி விடாமல் பஸ் வழியில் எங்கும் நிற்காது. அடுத்ததாக பண்ருட்டியில் தான் நிற்கும் எனக் கூறி பண்ருட்டிக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கிருந்த போலீஸ் நிலையத்தில் தங்க நகைகள் திருடப்பட்ட தகவலை தெரிவித்தனர். தகவலின் பேரில் பஸ்சில் இருந்த பயணிகளிடம் பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் நகைகள் கிடைக்காததால் அதற்கு முன்பு பஸ் நிறுத்தப்பட்ட இடத்தை போலீசார் விசாரித்தனர். விசாரித்ததில் இதற்கு முன்பாக திண்டிவனம் பஸ் நிலையத்தில் நின்ற போது 4 பயணிகள் மட்டுமே கீழ இறங்கினர் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசார் பெண் பயணியிடம் திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கு புகார் அளிக்குமாறு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். காலை 7 மணிக்கு நகைகளை பறிகொடுத்த அந்த பெண் பயணி நண்பகல் 1 மணியளவில் திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு வந்தடைந்தார். அதனை தொடர்ந்து அந்த பயணி தான் பறிகொடுத்த நகைகள் விபரங்களை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தெரிவித்து புகார் அளித்துச் சென்றார்.
விக்கிரவாண்டி டோல்கேட்டில் நகைகளை பறிகொடுத்த இடத்தில் பெண் பயணியை இறக்கி விட்டிருந்தால் அங்கிருந்த விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் அவர் நடந்த விபரங்களை தெரிவித்து இருப்பார். ஆனால் பஸ் டிவைரோ பஸ் வழியில் எங்கும் நிற்காது என்று கூறி மனிதாபிமானம் அற்ற முறையில் அவரை அங்கிருந்து பண்ருட்டியில் இறக்கி விட்டு சென்றுள்ளார். இதுபோல மனிதாபிமானம் அற்ற முறையில் பணிபுரியும் அரசு பஸ் டிரைவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.