திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
- சாயக்கழிவு ரசாயனங்களும் தீப்பற்றி எரிந்ததால் அங்கு வானுயர கரும்புகை எழுந்தது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் குளத்துப்பாளையம் மண்ணரையில், சாய ஆலைகளில் இருந்து பெறப்படும் சாயக்கழிவு நீரை சுத்திகரித்து, அதன் கழிவை திடப்பொருளாக மாற்றி மீண்டும் தண்ணீரை பயன்படுத்தும் வகையிலான பொது சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ரியாக்டர் எந்திரத்தல் திடீரென தீ பற்றி கொளுந்து விட்டு எரிய துவங்கியது. மேலும் பயன்படுத்தாத குழாய்களில் இருந்து வெளியேறிய வாயு காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்தது. சாயக்கழிவு ரசாயனங்களும் தீப்பற்றி எரிந்ததால் அங்கு வானுயர கரும்புகை எழுந்தது.
தொழிலாளர்கள் சுத்திகரிப்பு ஆலையை விட்டு வெளியேறிய நிலையில் புகை மூட்டம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு, தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 3 வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் 6 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சாயக்கழிவுகளை தரம் பிரித்து தரும் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எச்.பி., ரக குழாய்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும். தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.