நிதி உதவி பெற தையல் தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
- ஆதரவற்ற விதவைகள் உள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
- திருவண்ணாமலை கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர், சீர்மரபினர் குழுவாக சேர்ந்து ஆயத்த ஆடையகம் அமைக்க 3 லட்ச ரூபாய் வரை அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
நிதி உதவி பெற 10 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். குழுவில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வயது 20 ஆக இருக்க வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுக்கள், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள் உள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.