மஞ்சூர்-ஊட்டி குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
- வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
- கடந்த 3 நாட்களாக புலியின் நடமாட்டம் காணப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூரை சுற்றிய வனப்பகுதிகளில் புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வனப்பகுதி குறைந்து வருவதால் ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
அவ்வாறு வரும் வனவிலங்குகள் கால்நடைகளை அடித்து கொன்றும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி விட்டும் செல்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் அவ்வப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு புலி மஞ்சூர்-ஊட்டி சாலைக்கு வந்தது. பின்னர் அங்குள்ள மின்வாரியம் அலுவலகம் பாக்குறை அருகே சுற்றி திரிந்தது. இதனை அந்த வழியாக வாகனத்தில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-
மஞ்சூர் பாக்குறை மின்வாரிய அலுவலகம் அருகே, கடந்த 3 நாட்களாக புலியின் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் நாங்கள் பீதியில் உள்ளோம். மேலும் மஞ்சூர்-ஊட்டி ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
எனவே மஞ்சூர் பகுதியில் இரவுநேரங்களில் சுற்றித்திரியும் புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் அந்த புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.