உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்றதை போலீசுக்கு காட்டி கொடுத்த வாலிபர் கொடூர கொலை- 8 பேர் கும்பல் கைது

Published On 2025-01-16 14:51 IST   |   Update On 2025-01-16 14:51:00 IST
  • கொலை வெறி கும்பல் அங்கிருந்து எந்த வித பதட்டமும் இல்லாமல் தப்பி சென்று விட்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). இவர் வாடகை வீட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தை பெங்களூரில் தனியாக வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே வினோத்குமார் அமர்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வினோத்தை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி செல்ல முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் வினோத்குமாரை சரமாரியாக வெட்டினர்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். எனினும் கொலை வெறி அடங்காத கும்பல் வினோத்குமாரின் முகத்தை வெட்டி சிதைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே வினோத்குமார் பலியானார். அவரது முகமே தெரியாக அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் கொலை வெறி கும்பல் அங்கிருந்து எந்த வித பதட்டமும் இல்லாமல் தப்பி சென்று விட்டனர்.

தகவல் அறிந்ததும் மீன்பிடி துறைமுக போலீசார் விரைந்து வந்து வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கஞ்சா விற்பனையை போலீசுக்கு காட்டி கொடுத்ததால் வினோத்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (19), முத்து (19), கோகுல் (20), சுனில் (20), அபினேஷ் (19), எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த யுவராஜ் (20), நரேஷ் குமார் (20), தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (21) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

கடந்த 2 நாட்கள் முன்பு நரேஷ் குமார், ரித்திக் ரோஷன், கோகுல் ஆகியோர் அதே பகுதியில் கஞ்சா விற்று உள்ளனர். இது பற்றி வினோத் குமார் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நரேஷ் குமார், வினோத்குமாரிடம் ஏன் எங்களை போலீசிடம் காட்டிக் கொடுக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது வினோத் குமார் இங்கு எல்லாம் அமர்ந்து மது அருந்தக்கூடாது என்றும் கூறி கண்டித்து உள்ளார்.

இதனால் கோபம் அடைந்த நரேஷ் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து வினோத் குமாரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது தெரிந்தது. கைதான ரித்திக் ரோஷன், கோகுல், யுவராஜ், நரேஷ் குமார் ஆகிய 4 பேர் மீது கஞ்சா உள்பட அடிதடி வழக்குகள் உள்ளன. புதுவண்ணார்ப்பேட்டையில் பொங்கல் விடுமுறை நாளில் தொடர்ந்து 2 கொலைகள் அடுத்தடுத்து நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News