2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு ஈரோடு தேர்தலே அறிகுறி- அமைச்சர் கருத்து
- முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் தி.மு.க. கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார்.
- சிறுவர், சிறுமிகள் அமைச்சர் முன்பு சிலம்பம் சுற்றியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.
சென்னை:
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள சானிக் குளம் திருவள்ளுவர் மன்றம் அருகில் துறைமுகம் மேற்கு பகுதி 54-வது வட்டம் சார்பில் 400 மங்கையர்கள் ஒன்றுகூடி தைத்திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் தி.மு.க. கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து உரி அடித்தும் சிலம்பம் சுற்றியும் அப்பகுதி மக்களுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினார். மேலும் அப்பகுதி சிறுவர், சிறுமிகள் அமைச்சர் முன்பு சிலம்பம் சுற்றியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.
சிலம்பம் சுழற்றிய சிறுவர் சிறுமிகளுக்கு ரொக்கமாக பரிசுத்தொகையையும் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் ஐ.ஐ.டி. மாணவி பாலியல் குற்ற சம்பவம் தொடர்பான கேள்விக்கு, நடைபெறுகின்ற குற்றச் சம்பவங்களை தடுப்பது ஒரு புறம், நடந்து முடிந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுப்பது மறுபுறம்.
இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று பாகுபாடு கிடையாது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்ற சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
ஐ.ஐ.டி. சம்பவம் தொடர்பாக உரிய குற்றவாளி கைது செய்து கடுமையானப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றார்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே' என்பார்கள். அதுபோல 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெற்றிக்கு உண்டான அறிகுறியாக வெற்றிக்குரிய வெளிச்சமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருக்கும்.
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.