ஒருமுறை இரவில் நாடகம் முடித்துவிட்டு காரில் வீட்டுக்குக் திரும்பிக்கொண்டிருந்தார் ராதா. அசதியில் உறங்கி விட்டார். காரை சீரான வேகத்தில் ஓட்டிவந்த டிரைவர் திடீரென பிரேக் போட்டார். கார் குலுங்கி நின்றது. ராதா சட்டென விழித்தார். யாரோ ஒருவன் காரின் குறுக்கே வந்ததால் அந்த திடீர் பிரேக்.
"விருந்தாளிக்குப் பொறந்த புள்ள. நடுராத்திரியில குறுக்க ஓடுற.." டிரைவர் திட்டினார். ராதா டக்கென இப்படி சொன்னார்:
"கழுத, நாயின்னு திட்டு. விருந்தாளிக்குப் பொறந்த புள்ளைன்னு திட்டாதே.. ஏன் தெரியுமா? இதே ஊரில நாடகம் நடத்தறப்போ ரொம்ப வூட்டுலே விருந்து சாப்பிட்டிருக்கேன். ஓடினவன் என் புள்ளையாயிருந்தாலும் இருப்பான்."
ராதா இப்படிப் பல விஷயங்களில் ஒரு திறந்த புத்தகமாகத்தான் இருந்தார். தனக்கு பல மனைவிகள் உண்டு என்பதையும் மூடி மறைக்கவில்லை. ஆனால் எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்ததில்லை. ஏமாற்றியதில்லை. தன்னை நம்பி வந்த பெண்களுக்கு நிறையவே செய்திருக்கிறார்.
"மத்தவங்க வயிறெரிஞ்சா, பொறாமைப்பட்டா ஒண்ணும் ஆகாது. ஆனா ஒரு பெண்கூட பழகிட்டு, அவளை கர்ப்பமாக்கிட்டு, குழந்தைய கொடுத்துட்டு கைவிடவேக் கூடாது. ஏன்னா அவ வயிறெரிஞ்சா அது நம்மளைப் பாதிக்கும்" என்பார்.
-செந்துறை வே.குமரவேல்