ஆந்திராவில் மீனவர் வலையில் சிக்கிய 2 தங்க மீன்கள்- ரூ.1.40 லட்சத்திற்கு விற்பனை
- மிகவும் சுவை மிகுந்த, மருத்துவ குணம் கொண்ட இந்த மீன்களை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டனர்.
- ஏலத்தில் எடுத்த மீன்களை கொல்கத்தாவுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரி ஏற்பாடு செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், புடி மடக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மீனவர்கள் வலையில் 2 தங்க நிறத்திலான மீன்கள் வலையில் சிக்கியது.
2 மீன்களை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். ஆண் கச்சடி எனும் வகையை சேர்ந்த இந்த மீன்கள் தங்க நிறத்தில் இருப்பதால் இதை தங்க மீன்கள் என மீனவர்கள் அழைக்கின்றனர்.
மிகவும் சுவை மிகுந்த, மருத்துவ குணம் கொண்ட இந்த மீன்களை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டனர்.
புடி மடகாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் 2 மீன்களையும் ரூ.1.40 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார். ஏலத்தில் எடுத்த மீன்களை கொல்கத்தாவுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரி ஏற்பாடு செய்தார்.
சங்கராந்தி பண்டிகையையொட்டி மீனவர் வலையில் தங்க மீன் சிக்கி ரூ.1.40 லட்சத்திற்கு ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.