சட்டசபை தேர்தல்: டெல்லியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
- முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ஆகியோரும் தங்களது வாக்கை காலையிலேயே பதிவு செய்தனர்.
- வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க டெல்லி முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
புதுடெல்லி:
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
ஆளும் ஆம்ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க.வும், காங்கிரசும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. 9 மணி நிலவரப்படி 8.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் 67.47 சதவீத வாக்குகளும், 2020-ல் 62.69 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது. இந்த தடவை முந்தைய தேர்தல்களை விட அதிக சதவீத வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோரும் தங்களது வாக்கை காலையிலேயே பதிவு செய்தனர்.
சில வாக்குச்சாவடிகளில் கைவிரலில் வைக்கப்படும் மை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. விரலில் மை வைக்கும் முன்பே வாக்களித்தாக சிலர் பதிவுகளை வெளியிட்டனர். அதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் முதல்-மந்திரி அலுவலகத்தில் பணிபுரியும் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த ஒருவர் ரூ.5 லட்சம் பணத்துடன் பிடிபட்டார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க டெல்லி முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 57 இடங்களில் மொத்தம் 13,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.