ஆந்திரா, தெலுங்கானாவில் கோடைக்கு முன்பே வெப்ப அலை வீசும்- சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
- மார்ச் மாதம் இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெப்ப அலை அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளது.
- பொதுமக்கள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிக அளவில் பதிவாகி வருகிறது.
புவி வெப்பமயமாவதால் கடந்த ஆண்டு அதிகபட்ச வெப்ப ஆண்டாக கண்டறியப்பட்டுள்ளது. அதே வெப்பநிலை இந்த ஆண்டும் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 2-வது வாரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று துனி, நர்ஸாபுரம், காக்கிநாடா மச்சிலிப்பட்டினம், நந்தி காமா, காவாலி, கர்ணூல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு வெப்பம் பதிவானது.
அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க தொடங்கியது. கோடை காலம் தொடங்கும் முன்பே 100 டிகிரியை நெருங்கி உள்ளது.
இந்த மாநிலங்களில் மார்ச் மாதம் இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெப்ப அலை அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளது.
வெப்ப அலை காரணமாக பாதிக்கப்படும் நபர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்க கூடும்.
இதனால் பொதுமக்கள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆந்திர மாநிலத்தை ஒட்டி உள்ள சென்னை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக அளவு வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.