இனி இப்படி தான் சொல்லனும்.. அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் மாற்றம்..
- அயோத்தி ரெயில் நிலையம் என்ற பெயர் மாற்றப்படுகிறது.
- ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் மாற்றப்படுவதாக எம்.பி. லல்லு சிங் தெரிவித்து உள்ளார். டிசம்பர் 30-ம் தேதி ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி நேரில் திறந்து வைக்க இருக்கும் நிலையில், அயோத்தி ரெயில் நிலையம் என்ற பெயர் "அயோத்தி தாம்" என மாற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
"பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி அயோத்தி ரெயில் நிலையம் என்ற பெயர், 'அயோத்தி தாம்' என்று மாற்றப்படுகிறது. பொது மக்கள் எதிர்பார்ப்புக்கு இணங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றப்படுகிறது," என்று லல்லு சிங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ரெயில் நிலையத்தை வரும் டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக ராமர் கோவிலுக்கு சென்று முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட உள்ளார். பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ரெயில் நிலையத்தில் 12 லிஃப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.