இந்தியா

'என்னை பெற்றதற்கான தண்டனை..' எனக்கூறி தாயை கொலை செய்த கேரள இளைஞர் -பகீர் பின்னணி

Published On 2025-01-20 16:25 IST   |   Update On 2025-01-20 16:38:00 IST
  • ரூ. 5 லட்சம் செலவு செய்து 10 மாத சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் ஆஷிக் வீடு திரும்பினார்.
  • இதுவரை இரண்டு மூன்று முறை கொலை செய்ய முயன்றுள்ளார்

கேரளாவில் தாமரசேரி அருகே உள்ள புதுப்பாடியை சேர்த்தவர் சுபைதா கைக்கால் (53). இவரது மகன் ஆஷிக்(25).

சுபைதா தனது 23வது வயதில் கணவரை விவாகரத்து செய்தார். அப்போது ஆஷிக்கிற்கு 2 வயதுதான். அன்றிலிருந்து ஆஷிக்கை தனியாளாக சுபைதா வளர்த்து வந்தார்.

திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் சமையலில் உதவி செய்து சுபைதா பணம் சம்பாதித்து வந்தார். அந்தப் பணத்தில் ஆஷிக்கை வளர்த்தார். ப்ளஸ் டூவுக்குப் பிறகு ஆஷிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார்.

அதுவரை நன்றாக இருந்த ஆஷிக் புதிய நண்பர்களின் அறிமுகத்தால் தடம் மாறினார். போதை மருந்து உட்கொள்ள ஆரம்பித்தார். அன்றிலிருந்து வீட்டில் தாயாரை பணம் கேட்டு துன்புறுத்தி வந்தார். ஆஷிக் தினமும் அம்மாவிடம் சண்டை போடுவது வழக்கம்.

போதைக்கு அடிமையான ஆஷிக் பெங்களூருவில் உள்ள போதை ஒழிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டார்.  ரூ. 5 லட்சம் செலவு செய்து 10 மாத சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் ஆஷிக் வீடு திரும்பினார். தாய் சுபைதாவுக்கு சமீபத்தில் மூளையில் கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் தனது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி18 அன்று ஆஷிக் தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆஷிக் பக்கத்து வீட்டிலிருந்து எடுத்துவந்த அரிவாளை கொண்டு சுபைதாவின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சுபைதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தன்னைப் பெற்றெடுத்ததற்காக அவளைக் கொலை செய்தேன் என்று கூறி ஆஷிக் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அக்கம்பக்கத்தினர் ஆஷிக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சுபைதாவின் உடல் உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டது.

தாய்க்கும் மகனுக்கும் இடையில் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது என்றும் சொத்தை விற்று பணத்தை தருமாறு தாயிடம் ஆஷிக் வற்புறுத்தியுள்ளார் என்றும், அவர் ஒப்புக்கொள்ளாததால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் தாயை கொல்ல வேண்டும் என பலரிடம் கூறியுள்ள ஆஷிக், இதுவரை இரண்டு மூன்று முறை கொலை செய்ய முயன்றுள்ளார் என்றும் இந்தக் குற்றத்தைச் செய்யும்போது அவர் போதைப்பொருள் உட்கொண்டாரா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News