சந்திரபாபு நாயுடு மகனுக்கு துணை முதல்வர் பதவி?- பவன் கல்யாணுக்கு சிக்கல்
- ஆந்திர அரசியலில் அனல் பறக்கும் அளவுக்கு விவாதங்கள் நடந்து வருகின்றன.
- தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி கூட்டணியில் சிக்கல்
திருப்பதி:
ஆந்திராவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஜனசேனா மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாகவும், ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் துணை முதல் மந்திரியாகவும் உள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.
மந்திரியாக உள்ள நாரா லோகேஷ்க்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என முன்னாள் மந்திரியும் தெலுங்கு பேசும் எம்.எல்.ஏ.வான சோமி ரெட்டி சந்திரமோகன் ரெட்டி மற்றும் பொலிடா பீரோ உறுப்பினர் சீனிவாச ரெட்டி மூத்த கட்சி தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பாக லோகேஷ் நடை பயணமாக சென்று நேரடியாக மக்களை சந்தித்தார் இதனால் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
இதேபோல் தெலுங்கு தேசம் கட்சியில் 1 கோடி பேரை உறுப்பினராக சேர்த்து இருக்கிறார். இதனால் லோகேஷ் துணை முதல் மந்திரி பதவிக்கு 100 சதவீதம் தகுதியானவர் என தெரிவித்துள்ளனர்.
தற்போது துணை முதல் மந்திரியாக பவன் கல்யாண் பதவி வகித்து வரும் நிலையில் லோகேஷிற்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியில் வலுத்து வருகிறது.
அவருக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்கப்பட்டால் பவன் கல்யாணின் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனால் தற்போது ஆந்திர அரசியலில் அனல் பறக்கும் அளவுக்கு விவாதங்கள் நடந்து வருகின்றன.