வேலையைப் பொறுத்தவரை அதன் தரமே முக்கியம்: பாரத்பே சிஇஓ
- 90 மணி நேரம் வேலை என்பது கடினமானது என்றார் பாரத்பே சிஇஓ.
- உற்சாகமாய் வேலை செய்யும் ஊழியர்கள் தரம்வாய்ந்த முடிவுகளை கொடுப்பார்கள்.
புதுடெல்லி:
பிரபல தொழிலதிபரான இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.
இவரது கருத்துக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்தக் கருத்து அவ்வப்போது விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 90 மணி நேர வேலை குறித்து பாரத்பே தலைமை நிர்வாக அதிகாரி நளின் நேகி கூறியதாவது:
90 மணிநேரம் வேலை என்பது கடினமானது. என்னைக் கேட்டால் வேலையைப் பொறுத்தவரை அதன் தரமே முக்கியம்.
பணி-வாழ்க்கைச் சமநிலை பற்றிய விவாதம் எப்போதும் இருந்து வருகிறது. புதிய நிறுவனங்கள் மிகவும் வித்தியாசமான முறையில் தொழில் பாதையை வளர்க்க முடியும்.
பாரத்பே நிறுவனம் மக்களுக்கு ஒரு தொழில் நிறுவனமாக அறியப்பட வேண்டும். அதில்தான் எங்களது கவனம் உள்ளது. பணியிடத்தில் வேலை நேரத்தை அளவிடுவதற்கு பதிலாக, ஊழியர்களின் உற்பத்தித் திறன் மற்றும் முடிவுகளை அளவிடும்போது நல்ல பலன்களைக் காணலாம்.
அதிக உற்பத்தி திறனோடு பணி செய்வோர், தரம்வாய்ந்த முடிவுகளைக் கொடுப்பார்கள். குறிப்பாக உற்சாகமாய் வேலை செய்யும் ஊழியர்கள் தரம்வாய்ந்த முடிவுகளை அதிகம் கொடுப்பார்கள். அவர்கள் பணியை நாம் பின்தொடர வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.