இந்தியா

கோவில் விழாவில் ஒரு பக்தரை யானை துப்பிக்கையால் தூக்கி வீசியதை காணலாம்.

கோவில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை: 17 பேர் படுகாயம் - வீடியோ

Published On 2025-01-08 09:05 IST   |   Update On 2025-01-08 14:24:00 IST
  • விழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
  • பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்ததால் விழா நடந்த மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேற முடியாமல் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறு யானைகளை பயன்படுத்தும் போது, அவை துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் அடிப்படையில், கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள ஐகோர்ட்டு சமீபத்தில் பிறப்பித்தது.

இந்தநிலையில் கோவில் திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட யானை மிரண்டு பக்தர்களை தூக்கி வீசிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் புதியங்கடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த விழாவில் 5-க்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டன.

அவற்றில் ஸ்ரீகுட்டன் என்ற யானையும் அடங்கும். அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் பக்தர்கள் கூட்டத்தில் உலா வந்தன. அப்போது யானை ஸ்ரீகுட்டன் நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென மிரண்டது. அப்போது அந்த யானை சில பக்தர்களை துப்பிக்கையால் பிடித்து தூக்கி சுழற்றி எறிந்தது.

இதனால் கோவில் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்ததால் விழா நடந்த மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேற முடியாமல் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர்.

மேலும் யானை மீது அமர்ந்திருந்தவர்களும் கீழே விழுந்தார்கள். இந்த சம்பவத்தில் 17 பக்தர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோட்டக்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். யானை தூக்கி வீசிய பக்தர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவில் விழாவில் பக்தர்களை தூக்கி வீசிய யானை ஆக்ரோஷமாக ஒரே இடத்தில் நின்றபடி இருந்தது. நள்ளிரவு 12.30 மணி முதல் ஆக்ரோஷமாக இருந்த யானையால் பக்தர்கள் பீதியடைந்தனர். பின்பு இன்று அதிகாலை 2.30 மணிக்கு அந்த யானையை பாகன் அமைதிப்படுத்தினார்.

அதன்பிறகே அங்கு இயல்புநிலை திரும்பியது. கோவில் விழாவில் பக்தர்களை யானை தூக்கி வீசிய சம்பவத்தால் மலப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News