மசூதியில் தொழுகை செய்த இந்து கடைக்காரர்.. பரவிய வீடியோ - கொந்தளித்த இந்து அமைப்புகள்!
- அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
- அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.
இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.