மக்களவைத் தேர்தல் செலவு எவ்வளவு?.. கடைசி தேதி கடந்தும் அறிக்கை கொடுக்காத பாஜக
- அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
- உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து அந்த விவரங்களை வெளியிட்டது.
இந்தியாவின் 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பின்னர், தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக-வுக்கு 240 இடங்கள் கிடைத்தது. ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைந்தது.
இந்நிலையில் இந்த 2024 பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான செலவு அறிக்கையை பாஜக இன்னும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இதன்படி அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் செலவு அறிக்கைகளை 4.9.2024 க்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் பாஜக கடைசி தேதி கடந்தும் இன்னும் அறிக்கை சமர்பிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை விதிகள் ஆளும் கட்சியான பாஜகவுக்குப் பொருந்தாது போல? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தியது. கடந்த வருடம் பிப்ரவரியில் இந்த முறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது.
மேலும் எந்தெந்த கட்சி எவ்வளவு வாங்கியது என எஸ்பிஐ வங்கி நன்கொடை விவரங்களை வெளியிட உத்தரவிடப்பட்டது. ஆனால் காலதாமதம் செய்த எஸ்பிஐ, உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை அடுத்து அந்த விவரங்களை வெளியிட்டது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.6060 கோடி வரை நன்கொடை பெற்றதும் தெரியவந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.