உத்தரபிரதேசத்தில் நடந்த என்கவுண்டரில் 4 ரவுடிகள் சுட்டுக்கொலை
- துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
- என்கவுண்டரில் சிறப்பு படை போலீசின் இன்ஸ்பெக்டர் சுனிலுக்கு குண்டு காயம் ஏற்பட்டது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் ரவுடி கும்பலை சேர்ந்த குற்றவாளிகளுக்கும்-சிறப்பு படை போலீசாருக்கும் இடையே இன்று அதிகாலை துப்பாக்கி சண்டை நடந்தது.
போலீசாரின் என்கவுண்டரில் 'முஷ்தபா காகா' கும்பலை சேர்ந்த அர்ஷத் மற்றும் அவரது கூட்டாளிகளான மஞ்ஜீத், சதீஷ் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்றனர்.
கொள்ளை சம்பவம் ஒன்றில் அர்ஷத் தேடப்பட்டு வந்தார். அவரை பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவரை சுட்டு பிடிக்க முயன்ற போதுதான் இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த என்கவுண்டரில் சிறப்பு படை போலீசின் இன்ஸ்பெக்டர் சுனிலுக்கு குண்டு காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.