இந்தியா

மகா கும்பமேளாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவியுடன் பக்தர்கள் வருகை கணக்கெடுப்பு

Published On 2025-01-21 10:17 IST   |   Update On 2025-01-21 10:17:00 IST
  • பிரயாக்ராஜ் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
  • டிரோன் கேமராக்கள் மூலம் வான்வழி காட்சிகளும் படம் பிடிக்கப்படுகின்றன.

பிரயாக்ராஜ்:

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 4 நாட்களில் மட்டும் சுமார் 7 கோடி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களை கண்காணிக்க முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை உத்தரபிரதேச அரசு பயன்படுத்தி வருகிறது. பிரயாக்ராஜ் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு போலீசார், அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது முதல் முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு சதுர மீட்டருக்குள் எத்தனை பக்தர்கள் உள்ளனர் என்பதை கணக்கிட்டு வருகின்றனர்.

ஏ.ஐ. பொருத்தப்பட்ட 360-டிகிரி கேமராக்கள் கூட்ட நெரிசலை துல்லியமாக மதிப்பிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கேமராக்கள் கூட்ட நெரிசல் தரவுகளை பதிவு செய்ய நிறுவப்பட்டுள்ளன. மேலும் டிரோன் கேமராக்கள் மூலம் வான்வழி காட்சிகளும் படம் பிடிக்கப்படுகின்றன.

இது எந்தப் பகுதியில் கூட்ட நெரிசல் அதிகரித்தாலும் சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பக்தர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை உறுதி செய்யவும் உதவுகிறது.

Tags:    

Similar News