எனக்கு மதம், சாதி பிரிவினைகளில் நம்பிக்கை இல்லை: தேஜஸ்வி யாதவ்
- வக்பு வாரிய மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது.
- பீகார் மற்றும் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவிற்கு பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
நான் மதம், சாதி பிரிவினையை நம்பவில்லை. நான் கிறிஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்துள்ளேன். என்னுடைய மதசாரபற்ற நிலைக்கு இதுவே சான்று.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் மத்திய அரசு 44 பரிந்துரைகளை முன்வைத்தது. இறுதியாக பாராளுமன்ற நிலைக்குழு அதை 23 ஆக குறைந்தது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை 14 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வக்பு வாரிய மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது. இது மைனாரிட்டி சமூகத்தினருக்கு எதிராக குறிவைக்கப்படுகிறது. பீகார் மற்றும் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக அவர் சமூகத்தை பிளவுப்படுத்தும் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அவர்கள் எப்போதும் சமூகத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள். ஆனால் பீகார் மக்கள் புத்திசாலிகள். அவர்கள் இதை புரிந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.