பீகார் வரலாற்றில் லாலு பிரசாத்தின் ஆட்சி 'காட்டு ராஜ்ஜியம்' என்றே அழைக்கப்படும் - அமித் ஷா தாக்கு
- பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
- நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் ஆகியவை ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளன.
பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தற்போது முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடைய ராஷ்டிரிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கூட்டணிக்குமிடையில் இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, "நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் ஆகியவை ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளன. இன்று, பீகாரின் ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், தண்ணீர், மருந்துகள் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்த பிரதமர் மோடி பாடுபட்டுள்ளார்.
1990 முதல் 2005 வரை பீகாரில் லாலு யாதவ் அரசு என்ன செய்தது? மாநிலம் முழுவதும் கால்நடை தீவன ஊழலை நடத்தியதன் மூலம் நாட்டிலும் உலகிலும் பீகாரை லாலு யாதவ் அரசு அவமானப்படுத்தியது. பீகார் வரலாற்றில் அவரது அரசு எப்போதும் 'காட்டு ராஜ்ஜியம்' என்று அழைக்கப்படும்" என்று தெரிவித்தார்.