இந்தியா

இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

Published On 2025-03-18 19:56 IST   |   Update On 2025-03-18 19:56:00 IST
  • இளையராஜா சிம்பொனி இசைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார் என புகழாரம் சூட்டினார் பிரதமர்.
  • பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தது மறக்க முடியாதது என தெரிவித்தார் இளையராஜா.

புதுடெல்லி:

இசைஞானி இளையராஜா சமீபத்தில் லண்டனில் மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இதை செய்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் பெற்றார்.

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இளையராஜா இன்று சந்தித்தார். அவரிடம் சிம்பொனி இசைத்தது பற்றி பிரதமர் மோடி ஆர்வத்துடன் உரையாடினார்.

இந்நிலையில், இளையராஜா உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், மாநிலங்களவை உறுப்பினரான இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது இசை மற்றும் கலாசாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். லண்டனில் சில நாட்களுக்கு முன் வாலியன்ட் என்ற பெயரில் மேற்கத்திய சிம்பொனியை இசைத்து சரித்திரம் படைத்துள்ளார். உலகப் புகழ்பெற்ற ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது ஈடு இணையற்ற இசைப்பயணத்தில் இது ஒரு பெருமைக்குரிய அத்தியாயம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இளையராஜா வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது. அவருடன் பேசுகையில் சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல கருத்துக்கள் குறித்து பேசினோம். அவருடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நான் தலை வணங்குகிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News