ஒரே நாடு ஒரே தேர்தல்: இன்று பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்
- குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை கடந்த மாதம் ஒப்பதல் வழங்கியது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்பதால், இதற்கான மசோதா கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கும். ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும். மாநிலங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதிலும் மக்களவை ஒப்புதலுடன் இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 31 பேர் கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவராக பா.ஜ.க. எம்.பி. பி.பி. சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் 21 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, தி.மு.க. சார்பில் டி.எம். செல்வகணபதி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் தர்மேந்திர யாதவ், ஹரீஷ் பாலயோகி, விஷ்ணுதத் சர்மா, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஷிண்டே, அனுராக் சிங் தாக்கூர், சம்பித் பத்ரா ஆகியோரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். அதிகாரிகள் கூட்டுக்குழு உறுப்பினர்களுக்கு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள விதிகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள்.