"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்" நடைமுறைக்கு வர 10 ஆண்டுகளாகும் - முழு விவரம்
- முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
- 2-ம் கட்டமாக, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
புதுடெல்லி:
ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி, இந்த மசோதா உருவாக்கப்பட்டு அது அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டு தற்போது தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலை அவ்வளவு எளிதாக நடத்தி விட முடியாது.
இதற்கு சட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும் என்பதை தாண்டி அதோடு சில சட்டங்களை திருத்த வேண்டும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய அரசியலமைப்பில் குறைந்தபட்சம் 5 பிரிவுகளில் திருத்தங்கள் தேவைப்படும்.
பாராளுமன்றத்தின் அவைகளின் காலம் தொடர்பான சட்டப்பிரிவு 83.
ஜனாதிபதியால் மக்களவையை கலைப்பது தொடர்பான பிரிவு 85.
மாநிலத்தின் பதவிக் காலம் தொடர்பான பிரிவு 172 சட்டமன்றங்கள்.
மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174.
மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான பிரிவு 356 ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
`ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் ஒரே நேரத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.
முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
2-ம் கட்டமாக, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
2-ம் கட்ட தேர்தல் முதல் பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நடத்தப்படும்.
அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்கும்.
நாடு முழுவதும் விரிவான பிரசாரம் நடக்கும். இதனால் 5 வருடத்திற்கு ஒரு முறை அந்த 3 மாத காலம் மட்டும் தேர்தல் காலமாக இருக்கும். ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அமலாக்கக் குழு அமைக்கப்படும்.
தேர்தல் செலவுகள் இதன் மூலம் குறையும். அதேபோல் தேவையில்லாத பிரசார செலவுகளும் இதன் மூலம் குறையும். கடந்த மார்ச் மாதம் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி இந்த தேர்தல் முறை கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் இது தொடர்பாக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளனர்.
தேர்தல் முடிந்த பின் மாநில அரசு திடீரென கவிழ்ந்தால் என்ன ஆகும்?
தேர்தல் முடிந்த பின் மத்திய அரசு கவிழ்ந்தால் என்ன ஆகும்?
ஒரு சில மாநிலங்களில் மட்டும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?
இப்போது சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆட்சி நீடிக்கப்படுமா, கவிழ்க்கப்படுமா?
சட்டமன்றங்கள், மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174-ல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும். ஆனால் அப்படி செய்தால் மாநிலங்களின் உரிமை நீக்கப்படும் என்ற கேள்வி எழும்.
இதனையெல்லாம் சரிசெய்து இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர சுமார் 10 ஆண்டுகளாகும் அதாவது 2034-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின் போது இந்த திட்டம் நடைமுறைக்கு வரலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்டம் 2034-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.
அதற்காக, அரசியலமைப்பு (129-வது திருத்த மசோதா), 2024, அரசியலமைப்பில் 82A (பிரிவு 82-க்குப் பிறகு) நுழைக்க முன்மொழிகிறது, இது மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, ஜனாதிபதி அறிவிப்பை வெளியிடுவார் என்று குறிப்பிடுகிறது.
மக்களவைத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்வதே அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதாவின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் சில சூழல்களில், மக்களவையுடன் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கும் பிரிவும் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
அந்த மசோதாவின் பிரிவு 2 உட்பிரிவு 5-இன்படி, மக்களவைத் தேர்தலுடன் எந்தவொரு சட்டசபைக்கும் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கருதினால், அந்த சட்டசபைக்கு மாற்று தேதியில் தேர்தல் நடத்தப்படும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.