581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன: கோர்ட்டில் அறிக்கை தந்த காவல்துறை
- எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது.
- எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன.
மதுரா :
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நெடுஞ்சாலை போலீஸ் நிலையம் சார்பில் பல்வேறு சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை செர்கார் கிட்டங்கியில் போலீசார் பாதுகாத்து வந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்தபோது, கைப்பற்றப்பட்ட 586 கிலோ கஞ்சாவை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் கூறிய தகவல்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தது. "எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன. அவை 581 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டன. எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது" என்று அவர் வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, "எலிகளை கட்டுப்படுத்தவும், எலிகள் 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டதற்கான ஆதாரங்களை வரும் 26-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவும்" போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு முன்பு ஒருமுறை, 195 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக போலீசார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.