பெண்களுக்கு இலவசமோ இலவசம், ஆண்களுக்கு 2 மது பாட்டில் தரலாமே: எம்.எல்.ஏ. கோரிக்கை
- கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
- இதில் பேசிய எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பா, ஆண்களுக்கு 2 மதுபாட்டில் கொடுக்க வேண்டும் என்றார்.
பெங்களூரு:
கர்நாடகா சட்டசபையில் சமீபத்தில் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. இதில் கலால் வரியை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா பேசியதாவது:
கடந்த ஒரு ஆண்டில் கலால் வரியை 3 முறை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் வரியை மீண்டும் உயர்த்தினால் எப்படி ரூ.40,000 கோடி என்ற இலக்கை அரசால் எட்ட முடியும்?
மக்கள் குடிப்பதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினரை தடுக்கவே முடியாது.
மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இது அனைத்தும் நம் வரிப்பணம்.
அதுபோல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரு மது பாட்டில்களை வழங்குங்கள். அவர்கள் குடிக்கட்டும். ஆண்களுக்கு மாதம்தோறும் பணத்தை வேறு எப்படி கொடுக்க முடியும்? என தெரிவித்தார்.
கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையானது.