இந்தியா

பிரதமர் மோடி குறித்த ஆவணப்பட தடை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: சரத்பவார்

Published On 2023-01-29 02:04 GMT   |   Update On 2023-01-29 02:04 GMT
  • இந்தியாவில் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
  • மத பிரச்சினைகளுக்கு மக்கள் ஒருபோதும் தங்கள் வாக்குகளை அளிக்க மாட்டார்கள்.

மும்பை :

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஆவணப்படத்தை வெளியிட்டது.

இதற்கு பா.ஜனதா கட்சி தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவில் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார் கூறியதாவது:-

பி.பி.சி. ஊடக குழுவால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை என்பது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல். கடந்த சில நாட்களாக இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது. மத பிரச்சினைகளுக்கு மக்கள் ஒருபோதும் தங்கள் வாக்குகளை அளிக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த நடைபயணத்திற்கு மாறுபட்ட கோணத்தில் சாயம் பூச முயன்றது. சாதாரண மக்களின் பெரும் ஆதரவு காரணமாக இந்த முயற்சி தோல்வி அடைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவியில் இருந்து விலக விரும்புவதாக கூறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரத்பவார் பதில் அளித்து கூறுகையில், "மராட்டியத்தை சேர்ந்த பெரிய தலைவர்களான சத்ரபதி சிவாஜி மற்றும் பலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபரிடம் இருந்து மராட்டிய மாநிலமும், மக்களும் விடுபடுவது நல்ல விஷயம். அடுத்து யார் கவர்னராக வருவார் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை" என்றார்.

Tags:    

Similar News