இந்தியா

சுனிதா வில்லியம்ஸ் போலவே கேரளாவும் நெருக்கடிகளை எதிர்த்து போராடும்- நிதியமைச்சர் பாலகோபால்

Published On 2025-03-18 14:53 IST   |   Update On 2025-03-18 14:53:00 IST
  • கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு குறைந்துள்ளதால் கேரளாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளன.
  • மத்திய அரசு எவ்வளவு நெருக்கடிகளை கொடுத்தாலும் கேரளா சிறப்பாக செயல்படுகிறது

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் போலவே கேரளா மாநிலமும் மத்திய அரசு கொடுக்கும் நிதி நெருக்கடிகளை எதிர்த்து வலுவாக எதிர்த்துப் போராடும் என்று கேரளா நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்துள்ளார்.

கேரளா சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய நிதியமைச்சர் பாலகோபால், "மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பை மத்திய அரசு குறைந்துள்ளதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளன.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது மத்திய அரசின் அக்கறையின்மை அணுகுமுறையால், நிதி ரீதியாக வலுவான நிலையில் இருந்த தெலுங்கானா போன்ற மாநிலங்கள் கூட இப்போது மத்திய அரசின் நிதிக் கொள்கையால் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

மத்திய அரசு எவ்வளவு நெருக்கடிகளை கொடுத்தாலும் கேரளா சிறப்பாக செயல்படுகிறது. பல்வேறு சவால்களை சந்தித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸைப் போலவே, கேரளாவும் வலுவாக முன்னேறும்" என்று தெரிவித்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

இதையடுத்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம் சுனிதா வில்லியம்சை மீட்க சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது.

இந்நிலையில்,க்ரு டிராகன் விண்கலம், நேற்று இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News