இந்தியா

துரத்தி துரத்தி கடிக்கும் பாம்புகள்.. பரிகார பூஜைகள் செய்தும் பலனில்லை - தொழிலாளர் விரக்தி

Published On 2025-03-18 11:39 IST   |   Update On 2025-03-18 11:39:00 IST
  • பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார்.
  • ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கும்மரகுண்டாவை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 50). இவரது மனைவி சாரதா.

சுப்பிரமணியத்திற்கு 20 வயதாக இருந்தபோது முதல் முறையாக பாம்பு கடித்தது. அதன் பிறகு கூலி வேலைக்கு செல்லும் போதெல்லாம் வருடத்திற்கு 4 முதல் 5 தடவை பாம்புகள் கடித்தன.

ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும் போதும் உயிர் பிழைப்போமா என்று கவலையடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

பாம்பு கடிக்கு பயந்து சுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு கட்டிட வேலை செய்தார். பெங்களூரில் கட்டிட வேலை செய்யும் போதும் சுப்பிரமணியத்தை பாம்புகள் கடித்தன.

இதனால் விரத்தி அடைந்த சுப்பிரமணியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார். இதனால் ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

சொந்த ஊருக்கு திரும்பிய சுப்பிரமணியம் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன் தினம் கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மீண்டும் ஒரு பாம்பு வந்து சுப்பிரமணியத்தை கடித்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு சுப்பிரமணியம் தற்போது குணம் அடைந்து வருகிறார்.

இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில்:-

எனது கணவரை டஜன் கணக்கில் பாம்புகள் கடித்துள்ளன. ஒவ்வொரு தடவை பாம்பு கடிக்கும் போதும் வெளியில் கடன் வாங்கி சிகிச்சை பெறுவதும் மீண்டும் கூலி வேலை செய்து கடனை அடைப்பதே எங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இனியாவது பாம்பு கடியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கலக்கத்தில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளனர்.

Tags:    

Similar News