கும்பமேளாவால், தேசத்தின் ஆன்மா விழிப்படைந்துள்ளது- பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பாராட்டு
- அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளம் மகா கும்பமேளா ஆகும்.
- மகா கும்பமேளாவின் வடிவத்தில் இந்தியாவின் மகத்துவத்தை உலகம் கண்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடந்து வருகிறது.
பாராளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகாகும்பமேளா குறித்து பேசினார்.
அப்போது அவர், "மகா கும்பமேளாவை வெற்றியடைய செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகா கும்பமேளாவின் வெற்றிக்கு பலர் பங்களித்தனர். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த விழாவை சிறப்பாக முன்னெடுத்து நடத்திய உத்தரபிரதேச மாநில அரசை பாராட்டுகிறேன்.
திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கியது. இந்த நிகழ்வு அடுத்த தலைமுறைக்கான ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. அது தேசத்திற்கு புதிய திசையையும் வழங்கி உள்ளது.
உயர்ந்து வரும் இந்தியாவின் உணர்வுகளை மகா கும்பமேளா பிரதிபலித்தது. மகா கும்பமேளாவுடன் தொடர்புடைய இந்தியாவின் புதிய தலைமுறை, பாரம்பரியங்களையும் நம்பிக்கையையும் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறது.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளம் மகா கும்பமேளா ஆகும். கோடிக்கணக்கான பக்தர்கள் பங்களிப்போடு நடந்த இந்த விழா, மிகப்பெரிய இலக்குகளை அடைவதற்கான தேசிய அடையாளம் ஆகும். நமது திறன்கள் குறித்து மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு மகா கும்பமேளா பதில் அளித்துள்ளது.
ஒற்றுமையின் அமிர்தம்தான் மகா கும்பமேளாவின் முக்கிய விளைவாக இருந்தது. இந்தியாவின் ஒற்றுமை வலிமை, நம்மை சீர்குலைக்கும் அனைத்து முயற்சிகளையும் தகர்த்தெறியும் அளவுக்கு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் சிறப்பு. அதை கும்பமேளாவில் பார்த்தோம். அதை தொடர்ந்து வளப்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டபோது அடுத்த 1000 ஆண்டுகளுக்கு நாடு எவ்வாறு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது என்பதை பார்த்தோம். இந்த எண்ணம் மகா கும்பமேளாவின் போது மேலும் வலுப்பெற்றது. நாட்டின் கூட்டு வலிமையை அதிகரித்துள்ளது.
மகா கும்பமேளாவின் வடிவத்தில் இந்தியாவின் மகத்துவத்தை உலகம் கண்டுள்ளது. மகா கும்பமேளாவால் தேசத்தின் ஆன்மா விழிப்படைந்து உள்ளது. இது புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும். இது நமது பலத்தை சந்தேகிப்பவர்களுக்கு ஒரு பொருத்தமான பதிலையும் அளித்தது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
பிரதமர் மோடி உரைக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப முயன்றனர். விதிப்படி பிரதமரின் பேச்சுக்கு பிறகு எந்த கேள்வியும் எழுப்ப முடியாது என்று சபாநாயகர் ஓம்பிர்லா சுட்டிக்காட்டி அனுமதி மறுத்தார். இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா, கடந்த ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் பிரயாக்ராஜில் நடந்தது. இதில் திரிவேணி சங்கமத்தில் 65 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி தரிசனம் செய்தனர்.