திறந்து கிடந்த ரெயில்வே கேட்.. உள்ளே புகுந்த லாரி - இடித்துத் தள்ளிய ரெயில் - போக்குவரத்து முடக்கம்!
- திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
- சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரெயிலும் கண்டைனர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் அயோத்தியா - ராய்பரேலி ரெயில்வே கிராஸிங் அருகே இன்று அதிகாலை இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
அதிகாலை 2.30 மணியளவில் அந்த தடத்தில் சரக்கு ரெயிலானது வந்துகொண்டிருந்தது. அப்போது திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
இதில் படுகாயமடைந்த லாரியின் ஓட்டுநர் சோனு சவுத்ரி (28), மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் கூறினார்.
மேலும் சம்பவத்தின்போது கேட் மேன் அங்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலுமாக சேதமடைந்தது. சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் ரெயில் பாதை மற்றும் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்ததால் அவ்வழியாக ரெயில் இயக்கம் தடைபட்டுள்ளது. ரெயில் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என்றும் வடக்கு ரெயில்வேவின் லக்னோ பிரிவின் ரயில்வே கோட்ட மேலாளர் சச்சீந்தர் மோகன் சர்மா தெரிவித்தார்.