விமான நிலையத்தில் 7½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
- விமான நிலைய ஊழியர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- தங்கம் பறிமுதல் தொடர்பாக 2 விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது.
மும்பை:
மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலை தடுக்க சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அதிகாரிகள் வெவ்வேறு சம்பவங்களில் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட ரூ.8½ கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய விமான நிலைய ஊழியர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்த ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பிலான 2.8 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் உள்ளாடையில் மறைத்து வெளியில் எடுத்து செல்ல முயன்ற ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்க பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தங்கத்தை வாங்க வந்த மேலும் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதேபோல இன்னொரு சம்பவத்தில் வெளிநாட்டில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமான கழிவறை குப்பை தொட்டியில் இருந்து அதிகாரிகள் 2 கருப்பு நிற பையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்பிலான 3.1 கிலோ தங்கத்தை மீட்டனர்.
தங்கம் பறிமுதல் தொடர்பாக 2 விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.