இந்தியா

டி.எஸ்.பி. வெங்கடரமணா சுரேஷ் கழுத்தில் காலால் மிதித்து தாக்கிய காட்சி.

ஆந்திராவில் முதல்-அமைச்சர் வாகனத்தை மறிக்க முயற்சி: பா.ஜ.க. நிர்வாகியை கழுத்தில் மிதித்து தாக்கிய டி.எஸ்.பி.

Published On 2023-05-13 06:27 GMT   |   Update On 2023-05-13 06:27 GMT
  • கொதிக்கும் தார் சாலையில் தலைக்குப்புற விழுந்த சுரேஷ் கழுத்தில் மிதித்ததால் வலி தாங்க முடியாமலும், மூச்சு விட முடியாமலும் வேதனை அடைந்தார்.
  • பா.ஜ.க. பிரமுகரை டி.எஸ்.பி. காலால் மிதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலியில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி காரில் வந்தார்.

அப்போது பா.ஜ.க.வினர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் ஊழல் பெருகி விட்டதாகவும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகிரி சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் டி.எஸ்.பி. வெங்கடரமணா ரெட்டி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து வந்தன.

இதனைக் கண்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் குண்டலப்பள்ளி பர நாயக்கா, ராமி ரெட்டி பிரதாப் குமார் ரெட்டி எம்.எல்.ஏ, பொறுப்பாளர்கள் முகிராளா சுரேஷ் வெங்கடேஸ்வரன் ஆகியோர் போலீசாரின் தடுப்பையும் மீறி வாகனங்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த போலீசார் பா.ஜ.க.வினரை தாக்கினர். மேலும் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி காரை மறிக்க முயன்ற சுரேஷை டி.எஸ்.பி. வெங்கடரமணா கீழே தள்ளி 2 கை, கால்களையும் மடித்துக்கொண்டு கழுத்தில் 2 கால்களால் மிதித்தார்.

கொதிக்கும் தார் சாலையில் தலைக்குப்புற விழுந்த சுரேஷ் கழுத்தில் மிதித்ததால் வலி தாங்க முடியாமலும், மூச்சு விட முடியாமலும் வேதனை அடைந்தார்.

இதனைக் கண்ட பா.ஜ.க.வினர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுரேஷை விடுவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பா.ஜ.க. பிரமுகரை டி.எஸ்.பி. காலால் மிதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News