இந்தியா

காசர்கோடு வெடிவிபத்தில் 154 பக்தர்கள் காயம்: 3 பேர் கைது

Published On 2024-10-30 11:15 GMT   |   Update On 2024-10-30 11:15 GMT
  • பட்டாசு வெடித்து சிதறியதில் எழுந்த தீப்பிளம்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 154 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
  • பட்டாசுகள் வெடித்ததில் விதிமுறைகளை கடைபிடிக்காததே வெடிவிபத்து காரணம் என்பது தெரியவந்தது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே உள் அஞ்சூற்றம்பலம் பகுதியில் வீரர் காவு கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தெய்யம் என்ற பாரம்பரிய திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்துவந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தெய்யம் ஊர்வலம் நடந்தது. இதில் கலந்துகொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.

ஊர்வலம் தொடங்கிய போது கோவில் வளாகத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது தீப்பொறி பறந்து பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் விழுந்தது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்து சிதறியது.

இந்த பயங்கர வெடி விபத்தில் கோவில் திருவிழாவில் பங்கேற்றிருந்த பக்தர்கள் சிக்கினர்.

பட்டாசு வெடித்து சிதறியதில் எழுந்த தீப்பிளம்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 154 பக்தர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள், போலீசார் உள்ளிட்டோர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 10 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காசர்கோடு மாவட்ட கலெக்டர் இன்பசேகர், கண்ணூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜ்பால் மீனா, போலீஸ் சூப்பிரண்டு ஷில்பா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

மேலும் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். பட்டாசுகள் வெடித்ததில் விதிமுறைகளை கடைபிடிக்காததே வெடிவிபத்து காரணம் என்பது தெரியவந்தது. வெடி விபத்து நடந்த இடத்தை மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ் பார்வையிட்டார்.

மாவட்ட நிர்வாகம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கேரள மாநில அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த வெடி விபத்து தொடர்பாக நீலேஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து கோவில் கமிட்டி தலைவர் சந்திரசேகரன், செயலர் பரதன், பட்டாசுகளை வெடித்த ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். வெடிவிபத்து தொடர்பாக கோவில் கமிட்டி நிர்வாகிகள் பாஸ்கரன், தம்பி, சந்திரன், பாபு, சசி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Tags:    

Similar News