சினிமா விளம்பர நிகழ்ச்சியில் 2 நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை- சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு குமுறல்
- நடிகைகளின் கருத்து பதிவு மலையாள பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி நடந்தது.
இதில் சினிமாவில் நடித்த நடிகர்கள், நடிகைகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.
இதனால் வணிக வளாகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் நடிகர், நடிகைகள் அனைவரும் அங்கிருந்து திரும்பினர்.
நிகழ்ச்சி முடிந்த பின்பு அதில் பங்கேற்ற நடிகை ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்து பதிவிட்டார். அதில் சினிமா விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எனக்கு சிலரால் செக்ஸ் தொல்லை ஏற்பட்டது.
கூட்டத்தில் இருந்து ஒருவர் என்னை பிடித்து இழுத்தார். பல இடங்களில் தொட்டார். எங்கெங்கு தொட்டார் என்பதை சொல்லவே அருவெறுப்பாக இருக்கிறது. இது போன்ற தொல்லை என்னுடன் இருந்த இன்னொரு நடிகைக்கும் ஏற்பட்டது. எங்களுக்கு இதுபோன்ற தொல்லை கொடுத்ததால் உங்களின் வக்கிரம் தீர்ந்துவிட்டதா? என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
சமூக வலைதளத்தில் நடிகையின் பதிவு வெளியானதும், அவர் குறிப்பிட்டு இருந்த இன்னொரு நடிகையும், அதனை ஒப்புக்கொண்டு தனக்கும் இந்த தொல்லை நடந்தது உண்மைதான் எனக்குறிப்பிட்டு இருந்தார்.
நடிகைகளின் இந்த கருத்து பதிவு மலையாள பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.