FEES கட்டாததால் தேர்வு எழுத அனுமதிக்காத உ.பி. பள்ளி.. மனமுடைந்து 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
- வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
உத்தரப் பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரன் யாதவ் இன்டர் பள்ளியில் பயின்று வந்த 9 ஆம் வகுப்பு மாணவி ரியா பிரஜாபதி (17 வயது) நேற்று தேர்வு எழுத சென்றுள்ளார்.
பள்ளிக் கட்டணத்தில் ரூ.800 நிலுவைத் தொகையை செலுத்தாததால் அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகத்தினர், கட்டணம் செலுத்தாததற்காக அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்த சிறுமியின் தாய் பேசுகையில், "பள்ளி மேலாளர் சந்தோஷ் குமார் யாதவ், அதிகாரி தீபக் சரோஜ் மற்றும் முதல்வர் ராஜ்குமார் யாதவ் மற்றும் பலர் அவளை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளனர். அவளை தேர்வு எழுத விடவில்லை.
அவர்களின் நடத்தையால் வருத்தமடைந்த என் மகள் வீட்டிற்கு திரும்பி வந்து தன் அறைக்குச் சென்றாள். நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
நான் வீடு திரும்பியபோது, என் மகள் தூக்கில் தொங்குவதை கண்டேன்" என்று தெரிந்தார். பள்ளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]