இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது
- பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்ற முறைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்.
- அனைத்து மதங்களிலும் பெண் குழந்தைகளுக்கு சமமான சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என பா.ஜ.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், பொதுசிவில் சட்டத்திற்கான இணையதளத்தை உத்தராகண்ட் முதலமைச்சர் இன்று பிற்பகல் தொடங்கி வைத்தார்.
திருமணம், விவகாரத்து உள்ளிட்டவை அனைத்து மதத்தினருக்கும் பொது என்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27ஆம் தேதி பொது சிவில் சட்ட தினமாக கொண்டாடப்படும்.
அனைத்து மதங்களிலும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது ஆண்களுக்கு 21 ஆகவும் பெண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்ற முறைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும். அனைத்து மதத்தினருக்கும் கணவன் அல்லது மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். அனைத்து மதங்களிலும் பெண் குழந்தைகளுக்கு சமமான சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது
அரசியலமைப்புச் சட்டத்தின் 342வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நமது பழங்குடியினரின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் இந்த பொது சிவில் சட்டத்திலிருந்து அவர்களை விலக்கி வைத்துள்ளோம். பொது சிவில் சட்டம் எந்த மதத்திற்கோ அல்லது பிரிவினருக்கோ எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.