சிறப்புக் கட்டுரைகள்

பக்தனுக்கு ரத்தினமாலை கொடுத்த முருகன்!

Published On 2025-03-25 15:00 IST   |   Update On 2025-03-25 15:00:00 IST
  • பகழிக் கூத்தர் என்ற வைணவ பக்தரிடம் அவர் திருவிளையாடலை நடத்தி தனது பக்தர்களில் ஒருவராக மாற்றிய அற்புதம் சிறப்பானது.
  • தமிழ் இலக்கிய வகைகள் தொண்ணூற்று ஆறினுள் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும்.

திருச்செந்தூர் முருகன் பக்தர்களிடம் விளையாடி அவர்களை தன்வசம் ஆட்படுத்திக் கொள்வதை பல தடவை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதிசங்கரர், அருணகிரிநாதர், பகழிக் கூத்தர் போன்றவர்களை திருச்செந்தூருக்கு வரவழைத்து அற்புதங்கள் பல செய்த வரலாறு திருச்செந்தூர் முருகனுக்கு உண்டு. சில சமயம் நினைத்து பார்க்க முடியாத அற்புதங்களையும் திருச்செந்தூர் முருகன் நிகழ்த்தி காட்டுவது உண்டு.

பகழிக் கூத்தர் என்ற வைணவ பக்தரிடம் அவர் திருவிளையாடலை நடத்தி தனது பக்தர்களில் ஒருவராக மாற்றிய அற்புதம் சிறப்பானது. பகழிக் கூத்தர் ராமநாதபுரம் மாவட்டம் சதுர் வேதி மங்கலத்தை சேர்ந்தவர். அந்த ஊர் தற்போது சன்னாசி கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

தீவிர பெருமாள் பக்தரான இவர் இளமையில் கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இலக்கண, இலக்கியங்களை கற்றுத்தேர்ந்த அவர் வேறு எந்த கடவுளையும் வழிபடுவது இல்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்து வந்தார். முருகன் மீது பாடல் பாடுங்கள் என்று பலரும் இவரை வற்புறுத்தியது உண்டு. ஆனால் அவர் முருகப்பெருமானை புகழ்ந்து பாட மறுத்து வந்தார்.

அவரை தன்வசமாக்க முடிவு செய்த திருச்செந்தூர் முருகன் பகழிக் கூத்தருக்கு வயிற்று வலி வருமாறு செய்தார். இதனால் பகழிக் கூத்தர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். எத்தனையோ மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் திடீரென பகழிக்கூத்தர் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றினார். "அன்பனே... என்னைப் பார். உன் வயிற்று வலி தீரும்" என்று கூறினார்.

அதோடு முருகப் பெருமான், ஓர் ஏடும், இலை விபூதியும் கொடுத்தார். கண்விழித்துப் பார்த்த பகழிக் கூத்தரின் தலைமாட்டில் ஏடு இருந்தது. அந்த ஏட்டில், செந்திலாண்டவனே எழுதிய ஓர் அழகிய வெண்பாவைக் கண்டார் பகழிக் கூத்தர்.

அப்பாடலில் பகழிக் கூத்தரைப் புகழ்ந்தும், அவரது பாமாலையைத் தாம் கேட்க விரும்புவதாகவும், காப்பதற்கும், கூற்றுவன் அணுகாமல் தடுப்பதற்கும் தாம் அறிவோம் என்றும் கூறுகிறான் முருகப் பெருமான். அப்பாடல்:

"பூமாது போற்றும் புகழ்பகழிக் கூத்தாவுன்

பாமாலை கேட்கயாம் பற்றேமா - ஏமம்

கொடுக்க வறியேமா கூற்றுவன் வாராமல்

தடுக்க வறியேமா தாம்"

 

இப்பாடலைக் கண்ட பகழிக் கூத்தர் திருச்செந்தூர் முருகனின் அழைப்பை ஏற்று, திருச்செந்தூர் வந்தார். கடலில் மூழ்கி எழுந்தார். வயிற்றுவலி நீங்கப் பெற்றார். செந்தில் ஆண்டவன் அடியெடுத்துக் கொடுத்த 'பூமாது' என்ற சொல்லாலே தொடங்கி பாடல்களைப் பாடினார். திருச்செந்தூர் முருகனின் சிறப்புகளை போற்றி அவர் பாடிய பாடல்கள்தான் "திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்' என்று அழைக்கப்படுகிறது. இது 103 பாடல்கள் கொண்டது.

தமிழ் இலக்கிய வகைகள் தொண்ணூற்று ஆறினுள் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும்.

பிள்ளைத் தமிழ் நூல் என்பது வழிபடு கடவுளை அல்லது வள்ளல்கள், மன்னர்கள், அருளாளர்களைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்படுவதாகும். குமரகுருபரர் அருளிய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் இரண்டும் பிள்ளைத் தமிழ் நூல்களுள் போற்றத்தகும் சிறப்புடையவை.

பிள்ளைத் தமிழ் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண் பால் பிள்ளைத் தமிழ் என இருவகையாகும். ஆண் பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்று பத்துப் பருவங்களும், பெண்பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் என்று பத்துப் பருவங்கள் கொண்டதாகும். ஒவ்வொரு பருவத்திலும் பத்துப் பாடல்கள் அமையப் பாடப்பட்டிருக்கும். (பகழிக் கூத்தர் இந்த 'திருச்செந்தூர் முருகன்' பிள்ளைத் தமிழ் நூலில் 'முத்தம்' 'வருகை' அம்புலிப் பருவங்களில் கூடுதலாக ஒரு பாடல் ஆக 11 பாடல்கள் பாடியுள்ளார்)

1. காப்புப் பருவம்- பாட்டுடைத் தலைவனைக் காத்தருள வேண்டிக் கடவுள் வாழ்த்தாகப்பாடுவது, குழந்தை பிறந்த இரண்டாம் மாதம் இதற்கான காலம்.

2. செங்கீரைப் பருவம்- 5-ம் மாதம் குழந்தை ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டி இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தவழும் காலம்.

3. தாலப்பருவம்- 8-வது மாதம். குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் காலம்.

4. சப்பாணிப் பருவம்- 9-வது மாதக் குழந்தை உட்கார்ந்து கை கொட்டும் காலம்.

5. முத்தப் பருவம்- 11-ம் மாதம் முத்தம் தரக் கேட்டுக் குழந்தையைப் பெற்றோர் ெகாஞ்சும் காலம்.

6. வருகைப் பருவம்- ஒரு வயதுக் குழந்தை குறுநடை நடந்து குலாவும் காலம்.

7. அம்புலிப் பருவம்- ஒன்றரை வயதுக் குழந்தைக்கு நிலவை காட்டி குழந்தையோடு விளையாட வா என்று நிலவை அழைக்கும் காலம்.

8. சிற்றில் பருவம்- ஐந்தில் இருந்து ஒன்பது வயதுக்கு உள்ளான பருவம். மணல் வீடு கட்டிப் பிள்ளைகள் விளையாடும் காலம்.

9. சிறுபறைப் பருவம்- ஒன்பது வயதுக் குழந்தை சிறுவறை முழக்கி விளயைாடும் காலம்.

10. சிறுதேர் உருட்டும் பருவம்- ஒன்பது வயது கடந்த பிள்ளை சிறுதேர் ஒட்டித் தெருவில் விளையாடும் காலம்.

இந்த 10 பருவத்திலும் திருச்செந்தூர் முருகனை ஒப்பிட்டு, புகழ்ந்து, பக்தர்களை காக்க வருமாறு பகழிக் கூத்தர் பாடி இருக்கிறார். குறிப்பாக அவர் தனது பாடல்களில் அன்றைய காலக் கட்டத்தில் திருச்செந்தூர் எப்படி இருந்தது என்பதை மிக, மிக அழகாக சொல்லியுள்ளார். பெரும்பாலும் திருச்செந்தூர் கடலில் 15-ம் நூற்றாண்டில் சங்குகள் விளைவதை பகழிக் கூத்தர் தனது பாடல்களில் குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த பாடல்கள் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதாக உள்ளது.

ஒரு பருவ பாடலில், "வான் மழை போல அருள் மழை பொழியும் முருகனே" என்று கூறி உள்ளார். மற்றொரு பாடலில், "அலை வீசும் கரையோரம் வீற்றிருக்கும் வேலவா" என்று பாடியுள்ளார். அது மட்டுமல்ல, "சேவல் கொடி உடைய சேவகனே", "செந்நிற கொண்டை உடைய வெண்ணிற சேவல் கொடி ஏந்தியவனே" என்றெல்லாம் திருச்செந்தூர் முருகனை பகழிக் கூத்தர் புகழ்ந்து பாடியுள்ளார்.

பக்தர்களைக் கண்டதும் புன்னகைப் பூக்கும் முருகா

தென்றல் பூ மணம் சுமந்து வந்து வீசும் குன்றுகள் மீது அமர்ந்த முருகனே....

அசுரர்கள் இறைஞானம் பெற உதவிய முருகனே....

கடல் அலைகளில் மிதந்து வரும் சங்குகள் சிதறிக் கிடக்கும் செந்தில் மாநகரில் வீற்றிருப்பவனே....

சூரியன் அஞ்சும் வகையில் பிரகாசமாக ஒளி வீசும் முருகப் பெருமானே....

நீண்ட பனை மரம் போன்ற துதிக்கை உடைய யானைகள் கொண்ட படையை வைத்திருப்பவனே....

பெண் அன்னப் பறவைகள் அதிகம் நிறைந்த செந்தில் மாநகரில் அருள் மழை பொழிபவனே...

வலம்புரி சங்குகள் நிறைந்த திருச்செந்தூர் கடலோரத்தில் ஆட்சி செய்பவனே...

உப்பங்கழிகளும், அவற்றில் நிறைந்த நண்டுகளும், மீன்களும், தாரா பறவைகளும் கொண்ட செந்தில் மாநகரில் வாழ்பவனே....

இப்படியெல்லாம் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் நூலில் முருகப் பெருமானை பகழிக் கூத்தர் வர்ணித்துள்ளார். இந்த பாடல்கள் சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பைப் பெற்றன.

இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பகழிக் கூத்தர் அந்த நூலை பால சுப்பிரமணியனின் திருச்சன்னதியில் வைத்து வணங்கி அரங்கேற்றினார். என்றாலும் பகழிக் கூத்தரின் திறமை மதிக்கப்படவில்லை. அவர் வைணவர் என்று கூறி அவருக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்காமல் புறக்கணித்தனர்.

அதனால் மனம் உடைந்த பகழிக் கூத்தர் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் பாடல் கள் ஏட்டைக்கடலில் எறிந்து விடாலமா என்னும் அளவிற்குச் சிந்திக்கத் தொடங்கினார். அத்தகைய சிந்த னையோடு ஒருவீட்டுத் திண்ணை யில் படுத்து உறங்கினார்

பிள்ளைத் தமிழ்பாடுவதற்கு முன்பாக தம்கனவில் தோன்றிய அதே தோற்றத்தோடு தோன்றி முருகன் சில உத்தரவுகளை பிறப்பித்தார். திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஆத்தூர் என்னும் ஊரில் ஓர் ஆலயம் உள்ளது. அதற்கு அடியில் சென்று இரு என்று கூறி மறைந்தார்.

பகழிக்கூத்தரும் அவ்விடத்தை அடைந்தார். செந்தில் பதியைக் சார்ந்து குலசேகரப்பட்டினம் என்னும் ஊரில் காத்த பெருமாள் மூப்பனார் என்ற பெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருடைய கனவில் முருகன் தோன்றி ஆத்தூரில் பகழிக் கூத்தர் இருக்கும் செய்தியை அறிவித்து அவருடைய பிள்ளைத் தமிழ் நூலை அரங்கேற்றம் செய்யுமாறு கூறிமறைந்தார்.

செல்வந்தரும் அவ்வாறே பசுழிக்கூத்தரை கண்டார்.உரியநிலையில் செந்தில் பதியில் அதனை அரங்கேற்றம் செய்வித்தார். புலவருக்கு அருட்புலவர் என்னும் பட்டத்தைக் கொடுத்துப் பல வகைகளில் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

அதன் பிறகும் பகழிக் கூத்தருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. சாதாரண புலவர் தானே என்று கோவில் பணியாளர்கள் புறக்க ணித்தனர்.

பகழிக் கூத்தர் இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் முருகனையே சதா துதித்துக் கொண்டிருந்தார். திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே தங்கி இருந்தார். ஒரு நாள் இரவு பகழிக் கூத்தரின் திறமையையும் சகிப்புத்தன்மையையும் பாராட்டி முருகப்பெருமானே தன் கழுத்தில் இருந்த ரத்தின மாலை பதக்கத்தை அவருக்கு சூட்டிவிட்டார்.

மறுநாள் காலை நடை திறந்தவர்கள் முருகன் திருமேனியில் இருந்த ரத்தின மாலை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோவில் முழுக்க ரத்தின பதக்க மாலை யைத் தேடினார்கள். எங்கும் கிடைக்கவில்லை. அப்போது கோவில் பிரகாரத்தில் இருந்து ஒரு அசரிரீ கேட்டது.

"நான் எனது அன்பன் பகழிக் கூத்தனுக்கு அளித்தேன்" என்று குரல் ஒலித்தது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த கோவில் பணியாளர்கள் பகழிக் கூத்தர் தங்கி இருந்த இடத்துக்கு ஓடோடிச் சென்றுப் பார்த்தனர்.

அங்கு பகழிக் கூத்தர் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் கழுத்தில் முருகனின் ரத்தின பதக்க மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகே பகழிக் கூத்தரின் பக்தி மீது எல்லோருக்கும் மரியாதை வந்தது. அவரைப் பல்லக்கில் ஏற்றி திருச்செந்தூர் முழுக்க சுற்றி வந்து சீரும் சிறப்பும் செய்தனர். பகழிக்கூத்தருக்கு முருகன் அருள்புரிந்த இந்த செய்திகள் இலக்கியங்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன.

சாமானியரின் வாயால் பாடல் பெற விருப்பம் கொண்ட முருகப் பெருமானின் உள்ளம் எத்துணை உயர்வானது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதனால்தான் பகழிக் கூத்தர் எழுதிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழின் 'வருகைப் பருவ'த்தில் இடம் பெற்ற

"பேரா தரிக்கும் அடியவர்தம்

பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்

பேறும் கொடுக்க வரும்பிள்ளைப்

பெருமான் என்னும் பெருமாளே" என்னும் பாடல் இன்றும் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்போது பாடப்படுகிறது.

அடுத்த வாரம் இன்னொரு அற்புதம் பார்க்கலாம்.

Tags:    

Similar News