சனிப்பெயர்ச்சி 6 கிரகச் சேர்க்கை
- சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார்.
- ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு.
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம்
வாழ இன்னருள் தா தா
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 15ம் நாள், சனிக்கிழமை 29.3.2025 அன்று இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி தனது சொந்த வீடான கும்ப ராசி பூரட்டாதி 3ம் பாதத்தில் இருந்து குருவின் வீடான மீன ராசி பூரட்டாதி 4ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நாள் வரலாற்றில் இடம் பெறக்கூடிய நாளாக அமையப் போகிறது. நவகிரகங்களின் விந்தை மற்றும் அதிசயத்தை உலகம் பார்க்கப் போகும் நாள் என்றால் அது மிகையாகாது. இது போன்ற கிரக நிகழ்வுகள் பல முறை ஏற்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு முறை கூட்டு கிரகச் சேர்க்கை உருவாகும் போது ஏதாவது ஒரு பயத்தை அச்சுறுத்தலை மனித குலத்திற்கு பரிசாகத் தந்து விட்டே செல்கிறது.அந்தப் பரிசு பல வருடங்களுக்கு மக்களுக்கு மீள முடியாத சில பாதிப்பாக இருக்கிறது.
சமீபமாக 2019-ல் நடைபெற்ற கிரகணத்தையும் கொரோனா வைரஸ் உருவாகி உலக இயக்கம் ஸ்தம்பித்ததையும் வரலாற்றில் உலகமே மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நிகழ்வாகப் பதிவானதையும் யாராலும் மறக்க முடியாது.
இந்த ஆண்டும் உலகமே சில அச்சுறுத்தலோடு காலத்தை நகர்த்துகிறது. இந்த நாள் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். சனிபகவானும் ராகு பகவானும் நெருக்கமான பாகை இடைவெளியில் பயணிக்கிறார்கள்.
தற்போது கோச்சாரத்தில் சனிபகவானுடன் சூரியன் சந்திரன் புதன், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் சேருகிறது. இந்த கிரக கூட்டணியில் அனைத்து கிரகங்களையும் கேது பகவான் பார்க்கிறார்.இந்த கிரக கூட்டணியில் குருவும் செவ்வாயும் சம்பந்தப்படவில்லை என்று கூறினாலும் இப்போது கோட்சாரத்தில் குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனையில் உள்ளார்கள். ராகு கேதுவின் மையப்புள்ளியில் செவ்வாய் உள்ளது. நவகிரகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு நிலையில்தான் உள்ளது. இது கோட்சாரத்தில் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்குறி அனைவருக்குமே உள்ளது. 29.3.2025 அன்று ஏற்படக்கூடிய இந்த கிரக நிலவரம் சூரிய கிரகணம் மற்றும் அமாவாசையை ஏற்படுத்துகிறது. அன்று சனிக்கிழமையாகவும் இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது.
இந்த கிரக இணைவிற்கு செவ்வாயின் நேரடி பங்களிப்பு இல்லை என்பது மிகுந்த ஆறுதலான விஷயமாக உள்ளது.
ஆனால் சனி பகவானும் ராகு பகவானும் நெருக்கமான டிகிரியில் பயணிப்பதால் இது அச்சப்பட வேண்டிய விஷயமாகவும் உள்ளது. சனி பகவானும் ராகு பகவானும் ஒருவரை ஒருவர் கடக்கும் ஏப்ரல், மே மாதம் வரை வாழ்க்கையை பாதிக்க கூடிய எந்த புதிய முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக திருமணம், தொழில், உத்தியோகம் புதிய தொழில் முதலீடுகள், பெரிய பண பரிவர்த்தனை, நீண்ட தூர பயணம் ஆகியவற்றில் விழிப்புடன் இருப்பது நல்லது.
கூட்டு கிரகச் சேர்க்கை நடைபெறுவது நீர் ராசி என்றாலும் சனி, ராகுவும் 3 பாகை இடைவெளிக்குள் காற்று ராசியான கும்ப ராசிக்கு நெருக்கமான டிகிரியில் பயணிக்கிறார்கள். இங்கே நீர், காற்று இரண்டு தத்துவமும் இணைந்து இயங்குவதால் நீர் காற்று சம்பந்தமான பாதிப்புகள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.
நீர், காற்று சேர்க்கை அதிகமாக ஏற்படும்போது உடலில் வாதத்தன்மை அதிகமாகும். உடலின் கெட்ட நீர் வெளியேற முடியாமல் காற்று அடைக்கும். எனவே உடலில் வாதத் தன்மையை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்த்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இருள் கிரகமான சனி ராகுவின் சேர்க்கை. ராகுவிற்கு நெருக்கமாக பயணிக்கும் கிரகம் ராகுவால் கிரகணப்படுத்தப்படும். சுக்கிரனும் சனியும் ராகுவிற்கு நெருக்கமான பாதையில் உள்ளது. சட்டத்திற்கு புறம்பான விதி மீறல்கள் அதிகமாகும். பெண்களுக்கு பாதுகாப்பு குறையும். அநாச்சாரங்கள் அதிகமாகும். மீனம் ராசி கால புருஷ 12ம் இடம். உடல் உறுப்பில் கால் பாதத்தை குறிக்கும் இடம். எலும்பு நரம்பு , மூட்டு சம்மந்தமான பாதிப்புகள் அதிகரிக்கும். செயற்கை உறுப்புகள் அறுவை சிகிச்சை அதிகமாகும்.
மீனம் கடல், கடல் சார்ந்த பகுதியை குறிக்கும் இடம். மேலும் கடல் நீர் சார்ந்த பகுதிகளில் வாழ்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. நீண்ட தூரம் பிரயாணம் செய்பவர்கள் தக்கப் பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.
உலகில் மிகப்பெரிய கடல் விபத்துகள் ஏற்படலாம். எண்ணெய் கப்பல்கள் விபத்தின் காரணமாகவோ தாக்குதல் காரணமாகவோ மூழ்கி எண்ணெய் கசிவு காரணமாக கடல் உயிரினங்கள் பாதிப்படையும். புதிய கடல் வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும். புதிய எண்ணெய் வளம், புதிய கனிம வள சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். அரசாள்பவர்களின் ஸ்திரதன்மை பாதிக்கப்படும். தகுதியற்றவர்கள் பதவிக்குவர முயற்சி நடக்கும். அரசியலில் பதவியில் உள்ளவர்கள் பதவியை தக்கவைக்க போராடவேண்டும். அரசை கவிழ்க்க சதி நடக்கும்.
உலகில் போர் சம்பந்தமான அசாதாரண சூழ்நிலை நிலவும். பொருளாதார நெருக்கடி உலகை அச்சுறுத்தும். நாடுகளுக்கிடையே கடல் எல்லை சம்பந்தமாக மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும். கடற்கொள்ளையர்களின் அபாயம் அதிகரிக்கும். கடற்படையின் பெருக்கம் அதிகரிக்கும். அதிநவீன ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு வரும்.
கடந்த கால வரலாற்று ரகசியங்கள் வெளிவரும். நமது நாட்டில் கொள்ளையடிக்கப்பட்டு காணாமல் போன பல பொக்கிஷங்கள் திரும்ப நம் நாட்டிற்கு வரும். பங்கு சந்தையில் ஏற்ற இறக்கத்திற்கு தகுந்தவாறு கவனமாக முதலீடு செய்பவர்கள் மிகப்பெரிய வளர்ச்சி காண்பார்கள். குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி முதலீடு செய்பவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கடனையும் சந்திப்பார்கள். மக்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி ஏமாறுவார்கள். கள்ள சந்தை,கருப்பு பணம் பெருகும். அது சார்ந்த வழக்குகள் அதிகமாகும். புதிய வகை நீதிமன்றங்கள் பயன்பாட்டிற்கு வரும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
தொழிலாளர்கள் உரிமைக்கு போராட்டங்கள் தொடரும். குளோனிங் குழந்தைகள் உருவாக்கப்படலாம். இது யாரையும் பயம் காட்ட எழுதவில்லை. பொது நலம் கருதி வெளியிடப்பட்டுள்ளது. நடப்பது கலியுகம். ஆக்கமும் அழிவும் தருவது இயற்கை. கிரகங்கள் தன் கடமையை செய்யும்போது நாடும் நாமும் நலம் பெற வேண்டும் என்ற சங்கல்பத்தை பிரபஞ்ச சக்தியின் கையில் ஒப்படைக்க வேண்டும்.
ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. ஸ்ரீ சனி பகவான் காற்று ராசியான கும்பத்தை கடக்கும்போது அவரவர் தெரிந்த மந்திரங்களை பாராயணம் செய்வது மிகவும் நன்மை தரும். வீடும் நாடும் நலம் பெற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர பிரபஞ்ச சக்தி அளவிட முடியாத நன்மைகளை வழங்கும்.
ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்
கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி
இந்த சனிப்பெயர்ச்சி அனைவரின் வாழ்விலும் தித்திப்பான மாற்றமும், மகிழ்ச்சியும் ஆனந்தமும், நிறைந்த செல்வமும், நோயற்ற வாழ்வும் நிரந்தரமாக வழங்க பிரபஞ்ச தாயின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாக கிடைக்க வேண்டுகிறேன்.
இனி 12 ராசிகளுக்கும் 6 கிரகச் சேர்க்கைக்கான பரிகாரங்களை பார்க்கலாம்.
மேஷம்: ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் 6 கிரக சேர்க்கையுடன் சூரிய கிரக ணம் சம்பவிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வெளியூர், வெளிநாட்டு பயணம், தீர்த்த யாத்திரைகளை தவிர்த்தல் நல்லது.
முருகன் வழிபாடு அவசியம்.
ரிஷபம்: ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் 6 கிரக சேர்க்கையுடன் சூரிய கிரகணம் சம்பவிக்க உள்ளது.
உப ஜெய ஸ்தானமான 11-ம் இடத்தில் அதிக கிரகங்கள் இருப்பது நன்மை. ஆனாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பிறரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது
ஸ்ரீ காளியம்மனை வழிபட வேண்டும்.
மிதுனம்: ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் 6 கிரக சேர்க்கை ஏற்படுகிறது. 10ல் அதிக கிரக சேர்க்கை இருப்பது நல்லது.
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். சுய ஜாதத பரிசீலனையில் தொழில் துவங்கினால் நல்லது. ஸ்ரீ மகா விஷ்ணுவை வழிபடவும்.
கடகம்: ராசிக்கு 9ம்மிடமான பாக்கியஸ்தானத்தில் 6 கிரக சேர்க்கையும் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் பெரிய தீங்கு செய்வதில்லை. எனினும் வயதானவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களை அனுசரித்துச் செல்லவும். ஸ்ரீ பராசக்தியை வழிபடவும்
சிம்மம்: ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. சனியும், ராகுவும் ஒன்றையென்று கடக்கும் ஏப்ரல், மே மாதங்களில் யாரையும் நம்பி வாழ்க்கையை பாதிக்க கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது. பயணங்களில் கவனம் அவசியம். யாரையும் சபிக்கக் கூடாது. யாரிடமும் சாபம் வாங்க கூடாது. ஸ்ரீசரபேஸ்வரரை வழிபடவும்.
கன்னி: ராசிக்கு 7ம்மிடமான மீன ராசியில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. சிந்தனை, செயல்பாட்டில் எதிர்மறை எண்ணம் மிகுதியாகும். ஏப்ரல், மே மாதங்களில் திருமணம், கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. நண்பர்கள் தொழில் கூட்டாளிகள், வாழ்க்கை துணையை பகைக்க கூடாது. ஸ்ரீ பிருத்யங்கரா தேவியை வழிபடவும்.
துலாம்: ராசிக்கு ஆறாமிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சூரிய கிரகணத்துடன் 6 கிரக சேர்க்கை ஏற்படுகிறது. ஏப்ரல்,மே மாதம் வரை கொடுக்கல், வாங்கல், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையை மாற்றக்கூடாது. உயர் அதிகாரிகள் சக ஊழியர்களை அனுசரிப்பது நல்லது. ஸ்ரீ மகா கணபதியை வழிபடவும்.
விருச்சிகம்: ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் (ஏப்ரல், மே )அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச்சந்தை, சூதாட்டம், புதிய முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஸ்ரீ வாராகி அம்மனை வழிபடவும்.
தனுசு: 29.3.2025 அன்று ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் 6 கிரகங்கள் ஒன்று சேருகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சொத்து சம்பந்தமான முயற்சிகளை ஒத்தி வைக்கவும்.
தாய், தாய் வழி உறவுகளை பகைக்கக் கூடாது. ஸ்ரீராமரை வழிபடவும்.
மகரம்: ராசிக்கு 3ம்மிடத்தில் 29.3.2025 அன்று 6 கிரகச் சேர்க்கையும் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. இந்தியாவில் கிரகணம் தெரியாது என்றாலும் இந்த காலகட்டத்தில் ராகுவும் சனியும் நெருக்கமாக பயணிப்பார்கள். அதனால் புதிய தொழில் முயற்சியை தவிர்ப்பது நல்லது. அகலக்கால் வைக்க கூடாது.
ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபடவும்.
கும்பம்: அன்று ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானதில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை ஏற்படுகிறது. ராகு கேது பெயர்ச்சி வரை கொடுக்கல் வாங்கல் மற்றும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் தேவை. யாரையும் சபிக்க கூடாது. யாரிடமும் சாபம் வாங்க கூடாது. எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்தான உணவை சாப்பிட வேண்டும்.
காவல் தெய்வங்களை வழிபடவும்.
மீனம்: 29.3.2025 அன்று ராசியில் சூரிய கிரகணத்துடன் 6 கிரகச் சேர்க்கை நடைபெறுகிறது. செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் தேவை. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம்.
சனியும், ராகுவும் ஒன்றையொன்று கடக்கும் ஏப்ரல், மே மாதங்களில் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும். ஸ்ரீ கால பைரவரை வழிபடவும்.
காலம் ஒரு நாள் மாறும். கவலைகள் யாவும் தீரும். இதுவும் கடந்து போகும். உரிய பரிகாரங்கள் வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பது சிறப்பு.