சிறப்புக் கட்டுரைகள்

மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான தாம்பத்தியமே மழலை பாக்கியம் தரும்

Published On 2025-03-26 14:47 IST   |   Update On 2025-03-26 14:47:00 IST
  • ஒரு ஆணும் பெண்ணும் சந்தோஷமாக தாம்பத்திய உறவு கொள்ளும்போது கண்டிப்பாக குழந்தைபேறு பெற முடியும்.
  • பல நேரங்களில் குழந்தையின்மை என்று வரும்போது முதலில் ஆண்களின் ஈடுபாடு என்பது பாதிக்கப்படும்.

கணவன், மனைவி இடையேயான பாலியல் உறவு என்பது அடிப்படையில் சரியாக இருந்தால்தான் குழந்தை பேறு உருவாகும். ஆனால் அடிப்படையான பாலியல் உறவு என்பதே ஒரு பிரச்சினையாக இருந்தால் குழந்தைபேறு எப்படி வரும்? இந்த பிரச்சினைகள் இருக்கிற தம்பதியினரை முழுமையாக பரிசோதித்து அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். அதுபோன்ற தம்பதிகளுக்கான சிகிச்சைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

தம்பதிகளின் விரிவான தாம்பத்திய வரலாறு:

குழந்தையின்மை சிகிச்சைக்காக வருகிற ஆண்கள், பெண்களிடம் முதலில் நாங்கள், அவர்களின் விரிவான தாம்பத்திய வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இதற்காக அவர்களிடம் பாலியல் தொடர்பாக தெளிவாக சில கேள்விகளை கொடுப்போம். அதன் மூலமாக அவர்களின் பாலியல் உறவு எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். பின்னர் அவர்களை முறையாக பரிசோதித்து அதில் என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை சீர் செய்வோம்.

இதில் பெரும்பாலான தம்பதிகளுக்கு ஒரு விஷயத்தில் மட்டும் சந்தேகம் உள்ளது. முக்கியமாக இந்த தம்பதிகள் சொல்லும் விஷயம், அண்டவிடுப்பு தினத்தில் மட்டும் தானே பாலியல் உறவில் ஈடுபட வேண்டும். அப்படி செய்தால் குழந்தைபேறு வந்துவிடும் தானே என்பார்கள்.

மேலும் அடுத்தடுத்து பல்வேறு கேள்விகளும் அவர்களுக்குள் எழுகிறது. எங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் உச்சகட்டம் வர வேண்டுமா? அப்போதுதான் குழந்தைபேறு கிடைக்குமா? நாங்கள் ஆர்வம் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபடுகிறோம். எனது மனைவிக்கு ஆர்வம் இல்லை. அதனால் குழந்தை பேறு உருவாகவில்லையா? என்று பலவிதமான பிரச்சினைகளுடன் கூடிய கேள்வியை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.

அவர்களுக்கு நான் சொல்கிற ஒரே ஒரு விஷயம், குழந்தைபேறு என்பது இயற்கையாக வருகிற விஷயம். ஒரு ஆணும் பெண்ணும் சந்தோஷமாக தாம்பத்திய உறவு கொள்ளும்போது கண்டிப்பாக குழந்தைபேறு பெற முடியும். ஆனால் அதுவே மன அழுத்தத்தோடு, ஒரு குறிக்கோளை மனதில் வைத்து தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது குழந்தைபேறு பிரச்சினையாகி விடுகிறது. அதாவது தாம்பத்திய உறவு என்பது குழந்தைக்காக என்று நீங்கள் நினைக்கும் நிலையில், அந்த விஷயம் உங்கள் கருத்தில் வரும்போதே அது மன அழுத்தத்தை உண்டாக்குகிற விஷயமாக மாறி விடுகிறது.

திருமணமான புதிதில் விரைவில் கருத்தரிப்பு:

பல தம்பதியினர் திருமணமான புதிதில் குழந்தை தொடர்பாக எந்தவித திட்டமும் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டு சீக்கிரமே கருத்தரித்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அப்போது தாம்பத்திய உறவு கொள்வதில் பிரச்சினை இருக்காது. கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களுக்கு தாம்பத்திய உறவு என்பது ஒரு சந்தோஷமான விஷயமாக இருக்கும்.

தாம்பத்திய உறவு என்பதை கணவன், மனைவி இருவரும் தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதற்கும், அவர்கள் இருவருக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையாகவும் எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக அது நல்ல பலனை கொடுக்கும். அவர்கள் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தைபேறு பெறுவதற்கான வழிமுறையாகவும் இருக்கும்.

ஏனென்றால், தம்பதிகளின் தாம்பத்திய செயல்பாடுகளை எடுத்துக்கொண்டால் அதனுடைய முக்கியமான அடிப்படையே இருவரின் விருப்பம் தான். அதன்பேரில் அவர்களின் ஈடுபாடு, நெருக்கம், அன்பு, நேசம், ஆர்வம் எல்லாமே குழந்தை பாக்கியத்துக்கு காரணமாக அமையும்.

பல நேரங்களில் குழந்தையின்மை என்று வரும்போது முதலில் ஆண்களின் ஈடுபாடு என்பது பாதிக்கப்படும். குழந்தைபேறு உருவாக வேண்டும் என்று நினைக்கும் நிலையில், இன்றைக்கு நன்றாக தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் தனது மனைவி கர்ப்பிணி ஆவார் என்று நினைத்தாலே, அந்த கணவருக்கு விறைப்புத்தன்மை குறைந்துவிடும்.

அதேபோல் பெண்களுக்கு உள்ள பாதிப்பு என்னவென்றால், இன்றைக்கு அண்டவிடுப்பு நாள். இன்றைக்கு பாலியல் உறவு வைத்தால் தான் உயிரணுக்கள், கருமுட்டையுடன் சேரும் என்று நினைத்து அதில் ஈடுபடும்போது அந்த பெண்ணுக்கு லூப்ரிகேஷன் வராது. அவர் எப்போதும் அதே சிந்தனையில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு பிரச்சினை உருவாகி விடும்.

இந்த மன அழுத்தம் என்பது அவர்களுடைய ஆர்வத்தை குறைக்கிறது. மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் கவலையானது அவர்கள் தாம்பத்திய உறவு கொள்ளும் ஆர்வத்தை தடுக்கிறது. அவர்களுக்கு அது ஒரு எதிர்பார்ப்பு ஆகும். அந்த எதிர்பார்ப்பு காரணமாக மன அழுத்தம் அதிகமாக எற்படுகிறது.

பாலியல் உறவில் விருப்பம், ஆர்வம் ஆகிய இரண்டும் சீராக இருந்தால் தான் அந்த பெண்ணுக்கு லூப்ரிகேஷன்ஸ் நன்றாக இருக்கும். அந்த ஆணுக்கு விறைப்புத்தன்மை இருக்கும். இவை பாதிக்கப்படுவதால் இந்த தம்பதியினருக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாக அமைகிறது.

குழந்தைபேறு, பாலியல் உறவை ஒன்றாக குழப்ப வேண்டாம்:

இதற்கான தீர்வுதான் என்ன? முதலில் இந்த தம்பதியினருக்கு சொல்கிற விஷயமே, குழந்தைபேறு என்பதை எதிர்நோக்கி பாலியல் உறவு கொள்ளாதீர்கள். அது கண்டிப்பாக உங்களுடைய மன அழுத்தத்தை அதிகமாக்கும். குழந்தைபேறு, பாலியல் உறவு ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து குழப்பினாலே பிரச்சினை வரும்.

அடிக்கடி உறவு கொண்டால் குழந்தை பேறு உருவாகும். அண்டவிடுப்பு நாளில் தான் உறவு வைக்க வேண்டும். அன்றைக்குதான் முட்டை வெளிவரும் நாள் என்று பாலியல் உறவுகளை தேதி குறித்து செய்யாதீர்கள்.

இந்த மாதிரி தேதி குறித்து செய்தாலே பிரச்சினைகள் உருவாகும். எனவே உங்கள் மன அழுத்தம் குறைவாவதற்கு முதலில் இந்த கணக்கு, நேரம் எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள்.

உங்களின் உறவு முறைகளை பல வித்தியாசமான வகைகளில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு 14-வது நாள் என்கிற கணக்கீட்டை விட்டு விட்டு சந்தோஷமாக அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும்.

மாத விலக்கு நின்றதில் இருந்து அடுத்த மாத விலக்கு வரும் வரைக்கும் 10 முதல் 15 முறை உறவு கொள்கிறவர்களுக்கு நன்றாக கருத்தரிப்பதற்கு 85 சதவீதம் வாய்ப்புகள் உண்டு.

இதனை கருத்தில்கொண்டு உங்கள் சிகிச்சையையும், உங்கள் பாலியல் உறவையும் சம்பந்தப்படுத்தாதீர்கள். ஒருவேளை 14-வது நாளில் உறவு கொள்ள முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். அடுத்தடுத்த நாட்களில் உறவு கொண்டால் கூட கருத்தரிக்கும். எனவே அடிக்கடி உறவு கொள்வதை நல்ல சந்தோஷமான மனநிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

மன அழுத்தம் ஏற்படும் சூழ்நிலைகளை அந்த காலகட்டத்தில் உருவாக்காதீர்கள். தாம்பத்திய உறவை கணவன், மனைவி இடையேயான மகிழ்ச்சியை பெருக்குவதற்கான விஷயமாக மட்டுமே கருத்தில் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் கண்டிப்பாக குழந்தையின்மை பிரச்சினையும் வராது, குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு பாலியல் பிரச்சினைகளும் வராது.

 

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

இயற்கையாகவே குழந்தைபேறு பெறுவது சாத்தியம்:

இன்னொரு முக்கியமான விஷயம், இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தேவைப்பட்டால் பாலியல் தெரபி உள்ளிட்ட தெரபிகளை சீராக கொடுக்கவேண்டும். அதனுடன் நல்ல ஒரு கவுன்சிலிங்கும் கொடுக்கும்போது பிரச்சினைகள் குறைவாகிறது.

எனவே நாங்கள் நோயாளிகளிடம் பாலிக்குலர் ஸ்டடியை பற்றி பேசவே மாட்டோம். பாலிக்குலர் ஸ்டடி என்பது தாம்பத்திய உறவுக்கு நாள் குறிப்பதற்கு அல்ல. அது கருமுட்டைகள் வளர்ச்சி சீராக இருக்கிறதா, அதற்கு என்னென்ன மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதை முறைப்படுத்துவதற்கும், சரியான நேரம் கொடுப்பதற்கும் மட்டும் தானே தவிர, தாம்பத்திய உறவுக்குநாள் குறிப்பதற்கு அல்ல.

மாதவிலக்கு நின்றதில் இருந்து அடுத்த மாதவிலக்கு வருவது வரை ஒருநாள் விட்டு ஒருநாள் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள். தேதியில் கவனம் செலுத்தாமல் தாம்பத்திய உறவு கொண்டால் ஆண்களை பாதிக்கின்ற விறைப்புத்தன்மை செயலிழப்பு, விந்து முந்துதல், உறவு கொள்வதில் மன அழுத்தம் ஆகியவை மாறும். பெண்களுக்கும் ஏற்படுகிற வலி, உலர்வுத்தன்மை ஆகிய எல்லாமே சரியாகும்.

 

கண்டிப்பாக உறவுமுறைகளை மேம்படுத்தினால் குழந்தையின்மையை சரிப்படுத்த முடியும். குழந்தைப்பேறு என்பது இயற்கையாக நடக்கிற விஷயம். உறவு முறைகளில் அடிக்கடி சந்தோஷமாக இருங்கள். பல நேரங்களில் ரொம்ப மன அழுத்தம் இருந்தால் அதற்கான நல்ல தெரபி இருக்கிறது. இந்த தெரபி எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக உங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மேலும் பாலியல் தெரபி மூலமாக பாலியல் உறவுகளை மேம்படுத்தும்போது இயற்கை யாகவே குழந்தைபேறு பெறுவதும் சாத்தியமாகும். அப்படி நிறைய தம்பதியினர் குழந்தைபேறு பெற்றுள்ளனர். எனவே நாள், நேரம் குறிக்காமல் மகிழ்ச்சியாக தாம்பத்திய உறவில் ஈடுபடுங்கள். மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான தாம்பத்தியமே மழலை பேறு தரும்.

Tags:    

Similar News